ஆந்திர மாநிலம் பிராகசம் மாவட்டத்தின் அமராவதி-அனந்தபூர் நெடுஞ்சாலையில் கம்பம் அருகே கார் ஒன்று லாரி மீது மோதிய சாலை விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். பல்நாடு மாவட்டம் வேல்துருத்தி மண்டலத்தில் உள்ள சிரிகிரிபாடு கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் மச்சர்லாவில் இருந்து திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அந்த பகுதி காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் பிரேதத்தை கைப்பற்றி அருகே இருந்த மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதிவேகமே விபத்துக்கு காரணமாக எண்ணும் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் கத்து ஷியாம்ஜி கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டின்போது, நீண்ட நேரம் நடை திறப்புக்கு காத்திருந்த பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டிஅடித்துக்கொண்டு செல்ல முன்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலியானார்கள். மேலும், விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், காவல்துறையினர் விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.