தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே மின்சார பைக் விற்பனையகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடிக் கட்டத்தில் பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்கி வந்ததால் மின்சார பைக் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ அங்கிருந்து தங்கும் விடுதிக்கும் பரவியுள்ளது. அப்போது, அங்கு 25 முதல் 30 பேர் வரை தங்கி இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்த நிலையில், அதில் 8 பேர் இதுவரை தீ-க்கு இரையாகியுள்ளனர். இதில், சென்னையை சேர்ந்த நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் தீயில் சிக்கி இருந்த 7 பேரை மீட்டுள்ளனர். இந்த நிலையில், தீ விபத்து சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளனர்.