சென்னை: தமிழக சட்ட சபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறை கேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி பேசினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நில அளவையர் மற்றும் குரூப்-2 தேர்வுகள் நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 29 ஆயிரம் பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தி கலந்தாய்வுகளையும் முடித்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிட்ட தனியார் மையத்தில் படித்த 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இதுபோன்ற குழப்பங்கள் தொடர்ந்து நடக்கிறது. எனவே தேர்வு முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த அரசை கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு இதே பிரச்சினையை எழுப்ப சட்டமன்ற உறுப்பினர்கள் வேல் முருகன், நாகை மாலி ஆகியோரும் அனுமதி கேட்டு இருந்தனர். எனவே அவர்களும் அரசின் கவனத்தை ஈர்க்க ஒரு நிமிடம் பேச கேட்டுக் கொள்கிறேன் என்றார்.