கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ஆம் தேதியன்று அதிகாலை மாருதி கார் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இதையடுத்து, விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அங்கு ஆணிகள், கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, உயிரிழந்த முபினின், 2019ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுப்படுத்தினர். மேலும், கோவை மாநகர பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் ஜமேசா வீட்டில் சோதனையிட்டபோது, அங்கு பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றின. இந்த வெடிப்பொருட்கள் தயாரிக்க வேதிப்பொருட்கள் அமேசான், ஃபிளிப்கார்ட் மூலம் வாங்கியதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், வழக்கின் தீவிரத்தை உணர்ந்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக, இதுவரை 5 பேர் கைது செய்து உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் கோவை கார் வெடிப்பு கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ராஜசேகர் உத்தரவிட்டார். இவர்களையடுத்து, இன்று ஆறாவது நபராக அஃப்சர்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.