சென்னை, வடபழனி மன்னார் முதலி தெருவில் சரவணன் என்பவருக்கு சொந்தமான தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 16ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் முகமூடி அணிந்தபடி நிறுவனத்தில் இருந்த ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.30 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். அப்போது கொள்ளையர்களை துரத்தி சென்ற நிறுவனத்தினர் விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சையது ரியாஸ் (22) என்பவரை விரட்டிபிடித்து வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களைக் கொண்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிடிபட்ட ரியாஸ் கொடுத்த வாக்குமூலத்தின்படி, இஸ்மாயில், பரத், கிஷோர், ஜானி, தமிழ் செலவன் மற்றும் கண்ணன் (எ) மொட்டை ஆகியோர் சையது ரியாஸுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தப்பிச்சென்ற கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆந்திரா, பெங்களூர், திருச்சி போன்ற இடங்களுக்கு காவல்துறையினர் விரைந்தனர். இந்த நிலையில், காவல்துறை மேற்கொண்ட ஆய்வில், இதுவரை ரூ.4.5 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கிஷோர் கரண், தமிழ் செல்வன், கண்ணன் (எ) மொட்டை, தினேஷ் மற்றும் ஜானி (எ) சந்தோஷ் என 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ரியாஸ் கைதான நிலையில் இந்த வழக்கில் இதுவரை 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.