கழுத்தொட்டிய அட்டிகை
அகன்ற கல்மூக்குத்தி
வாய்கொள்ளாச் சிரிப்புடன்
பேரிளம் பெண்ணொருத்தி
அபூர்வத்திலும் அபூர்வமாக
பெருநகரத்தின் வீதிகளில் தட்டுப்படுவதை
நினைவில் ஊரைச் சுமந்துவாழும் ஒருத்தி
கண்டுவிடுகிறாள்
அதன்பிறகு ஊர்த்தெருவிலேயே
அலையும் அவளை மீட்பதென்பது
சவாலிலும் சவாலாக உள்ளது
மீனின் செதிலில் இருக்கும்
கடைசி சொட்டுக் கடலை
எப்படித் துடைத்தெடுக்க இயலும்?
-நாச்சியாள் சுகந்தி