குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 25ஆம் தேதி பதவியேற்றகவுள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், பல்வேறு மாநில சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களுமாக இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய 4,796 வாக்காளர்களைக் கொண்ட பட்டியலில் 4,754 பேர் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் வாக்களித்திருந்தனர். இவர்களில் 53 வாக்காளர்கள் செல்லாத வாக்குகளைச் செலுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவர்களுள் 15 வாக்காளர்கள் (28%) நாடாளுமன்ற உறுப்பினர்கள். மீதமுள்ள 38 வாக்காளர்கள் (72 சதவீதத்தினர்) பல்வேறு மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள். இதில், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஐந்து, டெல்லி, மேற்கு வங்கம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் நான்கு, உத்தர பிரதேசத்திலிருந்து மூன்று, அஸ்ஸாமிலிருந்து இரண்டு, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் தலா ஒன்று என மொத்தம் முப்பத்தெட்டு செல்லாத வாக்குகள் நாடு முழுவதிலுமுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.