காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரை (பாரத் ஜோடோ யாத்) ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய ராகுலின் இந்த யாத்திரையானது கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை கடந்து இன்று தெலங்கானா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த 4 மாநிலங்களில் கடந்த 50 நாட்களாக 1,230 கி.மீட்டர் தூரத்தை நடைபயணக் குழுவினர் கடந்துள்ளனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் நிறுத்தப்பட்டிருந்த நடைப்பயணம் நேற்றைய காங்கிரஸ் தலைவர் பதவியேற்பு விழாவிலும் ராகுல் காந்தி பங்கேற்ற பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த பயணத்தில், ராகுல் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 148 நாட்கள் மொத்தம் 3,600 கி.மீ. தொலைவு கடந்து காஷ்மீரை அவர் அடையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.