இந்தூர்: இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
இந்த டெஸ்டின் முடிவு இந்தியாவுக்கு மூன்று வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தூர் போட்டியிலும் இந்தியா வெற்றியை சுவைக்கும் பட்சத்தில், ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும். அத்துடன் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா ‘நம்பர் ஒன்’இடத்துக்கு முன்னேறி மூன்று வடிவிலான போட்டியிலும் ஒரே சமயத்தில் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தை எட்டிய முதல் அணி என்ற பெருமையை பெறும். ஒரு வேளை இந்த டெஸ்டில் தோல்வியை தழுவினாலும் பிரச்சினை இல்லை. 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமை உருவாகும். அந்த சிக்கலை தவிர்க்க 3-வது டெஸ்டிலேயே வெற்றி பெற வேண்டும் என்பதில் இந்திய வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.