கரூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தின் வைகாசி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவிற்காக கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரின் உறவினர்கள் மற்றும் திமுக மாநகர உறுப்பினர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. கம்பம் ஆற்றில் விடும் பகுதியில் இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் கூறும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று பசுபதிபாளையம் ஆய்வாளர் செந்தில்குமார் கூறிய நிலையில், கருர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி மற்றும் அனுமதி அட்டையுடன் காத்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பின்னர், சில மணி நேரம் காத்திருந்த கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்கின்ற விதத்தில் கம்பிவேலிகளை தாண்டி குதித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. கோவில் திருவிழாவில் தமிழக கூட்டணி கட்சியினை சார்ந்த எம்.பிக்குகூட அனுமதி மறுத்துள்ள சம்பவம் காங்கிரஸ் கட்சியிரிடையே பேசுப்பொருளாகி வருகிறது. ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை மற்றும் பேரறிவாளனை முதலமைச்சர் கட்டியணைத்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சில காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளும் இந்த சம்பவங்களை காரணமாக கூறி ராஜினாமா செய்து வருகின்றனர். இந்தவேளையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி எந்த நிலையில் இருக்கிறது என்ற கேள்வி எழுதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.