சென்னை: “சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், கோலாலம்பூர், துபாய், கொழும்பு, தோஹா, தாய்லாந்து, உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 37 பேர் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் யாருக்கும் எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா பரிசோதனை முறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தற்போது உலகம் முழுவதிலும், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் BA-5 என்று சொல்லப்படக்கூடிய அந்த வைரஸின் உள் உருமாற்றம் என்கிற வகையில் BF-7 என்கிற ஒரு வைரஸின் பாதிப்புதான் பரவி வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை 1.25 லட்சம் அளவுக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 72 ஆயிரம் படுக்கைகளை, கரோனா பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவான வகையில் தயார் நிலையில் உள்ளன. 3 மாதங்களுக்குத் தேவையான மருந்து கையிருப்புகள் உள்ளன. ஆக்சிஜனைப் பொருத்தவரை, சிலிண்டர்கள், கான்சென்டேட்டர்கள், ஜெனரேட்டர்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளன.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், கோலாலம்பூர், துபாய், கொழும்பு, தோஹா, தாய்லாந்து, உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 37 பேர் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் யாருக்கும் எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை. வெளிநாடுகளில் இருந்து பயணிகளின் உடல் வெப்பநிலையைக் கண்காணிக்கவும், யாருக்காவது அதிகமான வெப்பநிலை கண்டறியப்பட்டால், அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.