கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குடையத்தூர் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு 3 பேரின் உடல்களை இதுவரை சடலமாக மீட்டுள்ளனர். இந்த நிலையில், மண்ணில் புதைந்துள்ள மேலும் இரண்டு பேரின் உடல்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த மாநிலத்தின் கோட்டயம், பத்தனம் திட்டா, இடுக்கி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உதகையில் தொடர் கனமழை காரணமாக கல்லட்டி மலைப்பாதையில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் பல இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.