இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 25.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்த 110 ரன்கள் எடுத்தது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதனால், 3 போட்டிகள் கொண்ட இந்தத்தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று, இரு அணிகள் மோதும் 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ளது. முன்னதாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில், ஐசிசியின் ஒருநாள் போட்டி அணிகளின் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரின் அடுத்த இரு ஆட்டங்கள் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியா இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள இயலும். இல்லையென்றால் மீண்டும், 4ஆவது இடத்துக்கு சென்று பின்னடைவை சந்திக்கும். இந்தப்போட்டியில் இந்திய அணியில் பும்ரா 6 விக்கெட்டு வீழ்த்தினார். இதனால், ஒருநாள் போட்டி ஐசிசி தரவரிசைப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு இவர் முன்னேறியுள்ளார். இந்த இடத்தை பிடிக்கும் இரண்டாவது இந்திய வீரர் பும்ரா ஆவார். முதல் வீரர் கவில் தேவ் என்பது முக்கியனாது.