பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு ஏழு டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. முன்னதாக, முதலாவது டி20 ஆட்டத்தை இங்கிலாந்து அணி வென்றது. இதைத்தொடர்ந்து கராச்சியில் நடந்த இரண்டாவது டி20 ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட்டையும் இழக்காமல் அதிக ரன்களை விரட்டியது இதுவே முதல்முறை என்பதால் பாகிஸ்தான் அணிக்கு பாராட்டு குவிந்து வருகின்றன. மேலும், 2016ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி பாபர் ஆஸம் – முகமது ரிஸ்வான் இணை 169 ரன்கள் எடுத்திருந்தனர். அதுபோலவே, இந்த ஆட்டத்திலும், பாபர் ஆஸம் 110, ரிஸ்வான் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். எனவே, இலக்கை எட்ட அதிக ரன்கள் எடுத்த கூட்டணி என்கிற சாதனையையும் இவர்கள் படைத்துள்ளார்கள்.