கரும்பு விவசாயிகள் முதல் சர்க்கரை ஆலைகள் வரையில் மத்திய அரசு பல்வேறு நலத்திட்ட நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இதையடுத்து, உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில், பிரேசில் நாட்டிற்கு அடுத்தப்படியாக இந்தியா 2வது இடத்தில் உள்ளதாகவும், இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி, இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2021-22ம் நிதியாண்டில் இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி மதிப்பு, 4.6 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 65 சதவீதம் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி கடந்த எட்டு ஆண்டுகளில், 291 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேச சந்தைகளில் சர்க்கரை விலை மிகக் குறைவாக கிடைப்பதனால் இந்தியா செயற்கை முறையில் சர்க்கரை தயாரிக்கிறது என ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகிய நாடுகள் ஐநாவின் உலக வர்த்தக மையத்தில் புகார் அளித்ததிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான், வங்கதேசம், இலங்கை, சோமாலியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்துள்ளதால் இதுவரையில் இல்லாத அளவிற்கு சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை படைத்திருக்கிறது.