உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் அளித்துள்ள உலக சுகாதார மையத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரோயஸ், உலகம் முழுவதும் 78 நாடுகளில் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் அதிகமாக பரவி வருவதாகவும், மொத்த பாதிப்பில் 70 சதவிகிதம் ஐரோப்பிய நாடுகளிலும், 50 சதவிகிதம் அமெரிக்காவிலும் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் குரங்கு அம்மை நோய் 4 பேருக்கு பரவியுள்ளது. இந்த நிலையில், குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை 5 சதவிகிதம் பேர் பலியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்த அவர் கோரிக்கை வைத்துள்ளார்.