தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் ‘மேகி’ என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி கடந்த ஞாயிற்று கிழமை அன்று தாக்கியது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பல்வேறு நகரங்களில் 40 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பாய்ந்து, நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், நகரின் பல பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதி முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் பல்லாயிரகணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த புயலில் சிக்கி 1.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தநாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் தகவல் அளித்துள்ளது. 110க்கும் மேலான மக்கள் காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 167 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கண்டெடுக்கப்பட்டு உள்ளனர். பொதுவாக பிலிப்பைன்ஸ் நாட்டில் வறண்ட வானிலை நிலவ வேண்டிய இந்த பருவத்தில் இப்படி ஒரு புயல் வீசி நாட்டையே தலைகீழாக மாற்றி இருப்பதற்கு காரணம் காலநிலைமாற்றமே என்கிறார் அந்தநாட்டு மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி ஒருவர். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட ராய் புயலில் கிட்டதட்ட 500,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதோடு 375 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.