சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளதாவது : ”தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படுவதும் கைது செய்து, அங்கு சிறையில் அடைக்கப்படுவதும் கடும் கண்டனத்திற்குரியதாகும். மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு, வாழ்ந்து வரும் மீனவர்கள் உயிர், உடைமை உட்பட தொழில் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 12 பேரும், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை அரசு தனது கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, இந்திய நாட்டின் உதவியை நாடுகின்றது. இந்திய அரசு மட்டுமல்ல, தமிழ்நாடு அரசும் பெரும் உதவியை செய்தது. மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செய்தும் வருகின்றன. உதவிகளை பெற்றுக் கொள்கிற இலங்கை அரசு, இந்திய மீனவர்களை இரக்கமற்ற முறையில் கொடுமைபடுத்தி வருவதை நிறுத்தவில்லை என்பது நல்லெண்ணத்தை வலுப்படுத்த உதவாது.
பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என நரேந்திர மோடி வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இனியாகிலும் நிறைவேற்றப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் அவர்களது படகுகளையும், உபகரணங்களையும் சேதாரமின்றி ஒப்படைக்கவும் ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.