மனவலிமை இருந்தால் போதும், மலையையும் தூக்கி நிறுத்தலாம் என்பதற்கு உதாரணம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடற்பயிற்சி மூலம் உடல் பிரச்சினைகளை ஊதித் தள்ளியவர் அவர். அதனால்தான் அவர் அரசியலைத் தாண்டி அதிகம் பேரால் நேசிக்கப்படுகிறார். அமைச்சர் பணிக்கு மத்தியிலும் இன்றும் தன் உடற்பயிற்சிகளை தொய்வில்லாது செய்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் மருத்துவ நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று மாலை ஊட்டிக்கு வந்தார். அங்கு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர் நேற்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார். இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு தொட்டபெட்டா பகுதிக்குச் சென்ற அமைச்சர், அங்கிருந்து (ஊட்டி- கோத்தகிரி சாலையில்) கட்டபெட்டு கிராமம் வரை 16 கிலோ மீட்டர் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார். ஓட்டப்பயிற்சிக்குப் பின், கட்டபெட்டுவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெல்லி அருகே உள்ள நொய்டா நகரில் சமீபத்தில், தன்னுடைய 135வது மாரத்தான் ஓட்டத்தை ஓடி நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுதவிர, நிகழ்ச்சிக்குச் செல்லும் இடங்களில்கூட அவர் தொடர்ந்து உடற்பயிற்சியில் கவனம் செலுத்திவருகிறார்.