2008ஆம் ஆண்டு இயக்குநர் சசிகுமார் நடித்து இயக்கி வெளியான திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை மாவட்டத்தை கதை களமாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர்கள் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கறுப்பு ஆகியோர் இணைந்து நடித்துள்ளார். படத்தில் ’கண்கள் இரண்டால்’ உள்ளிட்ட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இயல்பான கதை, நடிப்புக்காக பேசப்பட்ட இந்த திரைப்படத்துக்கு, சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. படத்தின் இயக்குநர் சசிகுமார் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு சுப்ரமணியபுரம் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி சுப்ரமணியபுரம் வெளியான நினைவுகளை இயக்குநர் சசிகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன், தனது அடுத்த திரைப்படம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.