கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட அந்த மாநில மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் சிவப்பு நிற எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு ஆகிய இடங்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. இதையடுத்து, அணைகளின் நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும், நிலைமை தற்போது வரை கட்டுக்குள் இருப்பதாகவும் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் 35 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.