உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்ரி மலைத்தொடரில் உள்ள நேரு மலையேற்ற பயிற்சி நிறுவனம் மூலம் 7 பயிற்சியாளர்கள் உள்பட 41 பேர் பயிற்சிக்கு சென்றிருந்தனர். இவர்களில், திரவுபதிகா தண்டா மலைச்சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 29 மலையேற்ற வீரர்கள் சிக்கினர். இதில், 10 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, மலை பகுதியில் சிக்கியுள்ள வீரர்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்துடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையும், ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் பனிச்சரிவில் சிக்கிய 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் புஷ்கர் தாமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.