சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 651 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டு இருந்த நிலையில் நள்ளிரவு வரை 586 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நள்ளிரவு 12 மணி வரையில் இயக்கப்பட்ட 2,686 பஸ்களில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.இதுதவிர ஆம்னி பஸ்களில் 20 ஆயிரம் பேரும் சென்ட்ரல், எழும்பூரில் இருந்து ரெயில்கள் மூலம் சுமார் 1 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று வெளியூர் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் 1,855 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களையும் சேர்த்து மொத்தம் 4000 பஸ்கள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்கின்றன. கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: நேற்று ஒரேநாளில் 1½ லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது இன்று 2 லட்சத்தை தாண்டும். வழக்கமாக பொங்கல் பண்டிகை நாட்களில் 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு காரணம் முன்பதிவில் அதிகளவில் அரசு பஸ்கள் சேர்க்கப்பட்டது தான். நேற்று 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்தனர். இன்று பயணம் செய்ய 45 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பொது மக்கள் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஸ் நிலையங்களுக்கு வரும் மக்களுக்கு அவர்களின் தேவை அறிந்து பஸ்கள் இயக்கப்படும். பிற போக்குவரத்து கழக பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்ட நிலையில் மேலும் தேவைப்பட்டால் சென்னை மாநகர பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.