60,000 இரத்தக் கொடையாளர்கள் கொண்ட குழு!
தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம். மதுரையில், ரத்த தானம் செய்ய 60,000 நபர்களை கொண்ட, ’பூம் மதுரை நன்கொடையாளர் குழு’ என்ற அமைப்பை நிர்வகித்து வருகிறார் ஷர்மிளா.
ஷர்மிளா ஒரு பள்ளி ஆசிரியர். மரம் நடுதல், நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு சமூக ஆர்வலராக தனது பரிணாமத்தை காட்டுகிறார் ஷர்மிளா. தன் குழுவோடு இணைந்து நகர்ப்புறங்களில் 2000 மரக்கன்றுகளை நட்டிருக்கும் ஷர்மிளா ஒரு சாதனைப் பெண்ணாகவே வலம் வருகிறார்.
மதுரையில் உள்ள லே சாட்லியர் என்ற பிரெஞ்சு பள்ளியில் பயின்ற அவர் விளையாட்டிலும், படிப்பிலும் வல்லமை வாய்ந்தவராக இருந்தார். மேலும் தடகள வீராங்கனையாகவும், பள்ளி மாணவ தலைவராகவும் தன் சிறுவயதை அவர் அலங்கரித்தார்.
ஷர்மிளா கல்லூரி படிப்பை மதுரையில் உள்ள லேடி டோக் கல்லூரியில் முடித்தார். M.A ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற ஷர்மிளா B.Ed முடித்து ஆங்கில ஆசிரியராக பள்ளியில் பணியாற்றி வருகிறார். ஷர்மிளா தனது பணி நேரத்துக்கு இடையே தொடர்ந்து சமூக சேவையை செய்து வருகிறார்.
சிறுவயது முதலே சேவை மனப்பான்மை கொண்ட ஷர்மிளா முதலில் ’வா நண்பா’ என்ற அமைப்பின் மூலம் ஞாயிறு தோறும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட்டார்.
பூம் என்ற சமூக அமைப்பு 2011ம் ஆண்டு விக்னேஸ்வரன் என்ற சமூக ஆர்வலரால் தொடங்கப்பட்டது. அவர்களால் இந்த அமைப்பை தொடர்ந்து நடத்த முடியாததால் இதில் ஒரு உறுப்பினராக இருந்த ஷர்மிளா பூம் அமைப்பை எடுத்து நிர்வகிக்கத் தொடங்கினார். அவரது தலைமையில் இந்த அமைப்பில் 16 ஒருங்கிணைப்பாளர்கள், அவர்களுக்கு கீழ் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.
ரத்த தானம் செய்வதை சேவையாக கொண்ட பூம் அமைப்பின் உறுப்பினர்கள் காலம், நேரம் கருதுவதில்லை. யாருக்காவது இரத்தம் தேவைப்பட்டால் பூம் குழுவிலுள்ள ஒருங்கிணைப்பாளர்களிடம் சொல்லி அவர்கள் மூலம் உறுப்பினர்களை உடனடியாக ரத்த தானம் செய்ய அனுப்புகிறார்கள். சமூக வலைதளங்களை சரியாக பயன்படுத்தும் இவர்கள்,நேரடியாக தொடர்பு கொள்வோருக்கும் தாங்களே தேடிச்சென்று ரத்த தானம் செய்கிறார்கள்.
இதற்காக இந்த அமைப்பு 60,000 உறுப்பினர்களை கொண்டுள்ளது.ஒரு மாதத்திற்கு சராசரியாக 150 நபர்கள் பூம் அமைப்பிலிருந்து ரத்த தானம் செய்கிறார்கள் . இதுவரை இவர்கள் செய்த சேவைக்காக 27 விருதுகள் வாங்கி உள்ளார்கள். ஷர்மிளா கூறுகையில், ‘இந்த விருதுகளில் எங்களுக்கு பெருமை இல்லை. தினமும் பல உயிர்களை காப்பாற்றுகிறோம் என்பதில் தான் எங்களுக்கு பெருமை,’ என மெய்சிலிர்க்க வைக்கிறார்.
புற்று நோயில் சிக்கி தவிக்கும் சிறு குழந்தை முதல் பெரியவர் வரை தத்தெடுத்து ஒற்றை பிளேட்லெட் நன்கொடையாளர் (single donar platelet) மூலம் இரத்த தட்டு தானம் செய்து இந்த பூம் அமைப்பினர் உதவுகிறார்கள். இந்த அமைப்பின் மூலம் 450க்கும் மேற்பட்ட புற்று நோயாளிகளுக்கு ரத்ததானம் செய்ய எந்நேரமும் காத்திருக்கின்றனர்.
2017 முதல் பணிச்சுமையால் வரும் மன உளைச்சலில் இருந்து விடுபட மதுரை நகரில் உள்ள 3000 போலீசாருக்கு மன அழுத்த மேலாண்மை(stress management) பயிற்சி அளித்து வருகிறார் வீரமங்கை ஷர்மிளா.
மேலும் ’நிழல் நண்பர்கள்’ குழுவும், யபசியாற்று’ குழுவும், ’பூம்’ குழுவும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காக தொடங்கப்பட்டாலும் தற்போது எந்நேரமும் ரத்ததானம் செய்ய கைகோர்த்து நிற்கின்றனர். மேலும் இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு தன் நேரத்தை முழுக்கச் செலவிடுகிறார் ஷர்மிளா.
ஷர்மிளாவுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய மகள் பத்தாவது படிக்கிறார். மகன் ஏழாவது படிக்கிறார். வீட்டுப் பணிகளையும் செய்துகொண்டு சமூகப் பணிகளையும் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவதாக ஷர்மிளா கூறுகிறார்.
’தனி வாழ்வில் நான் கண்ட வலிகளை மறக்கவே சமூக சேவையை செய்கிறேன். சமூக சேவைகள் செய்யும்பொழுது நான் தனிமையை மறக்கிறேன்,’ என மனம் திறக்கிறார் ஷர்மிளா. மேலும், ’நான் எதுவும் சாதிக்கவில்லை. ஏதாவது சாதித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் என்னை அதிகமாக ஊக்குவிக்கிறது,’ என்கிறார் ஷர்மிளா.
சேவைத் துறையில் மேலும் புதிய நுணுக்கங்களைப் புகுத்த தொடர்ந்து பல துறை வல்லுநர்களுடன் ஷர்மிளா கருத்துப் பரிமாற்றம் நடத்தி வருகிறார். மக்களிடம் இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வகுப்புகளையும், ஆலோசனை பட்டறைகளையும் அவர் நடத்தி வருகிறார்.
இன்னும் நீண்ட காலம் பயணிக்க வேண்டும் என்று ஷர்மிளா நினைக்கிறார். அதற்கான மனத் துணிவும், செயல் தெளிவும் தனக்கு இருப்பதாக அவர் நம்புகிறார்.
ஷர்மிளாவின் நம்பிக்கை வீண் போகாது என்று தாராளமாக நம்பலாம்.
– காயத்ரி