டென்மார்க் நாட்டில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் சர்வதேச நீச்சல் போட்டியில் இந்திய வீரர்கள் சாஜன் பிரகாஷ் தங்கப்பதக்கத்தையும், வேதாந்த் மாதவன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். இதில் வேதாந்த் மாதவன், நடிகர் மாதவனின் மகன் ஆவார். டென்மாா்க் தலைநகா் கோபன்ஹேகனில் டேனிஷ் ஓபன் 2022 போட்டி நடைபெற்றது. இதில் சா்வதேச போட்டியில் முதன்முறையாக பங்கேற்றுள்ள இந்தியாவின் சாஜன் பிரகாஷ் ஆடவா் 200 மீ. பட்டா்பிளை பிரிவில் 1:59:27 நிமிடத்தில் போட்டி தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரா் என்ற சிறப்பையும் சாஜன் பெற்றுள்ளாா். அடுத்து, ஆடவா் 1500 மீ. ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் 16 வயதே ஆன வேதாந்த் மாதவன் (நடிகர் மாதவனின் மகன்) 15:57:86 நிமிடத்தில் போட்டி தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு, வேதாந்த் மாதவன் பெங்களூரில் நடைபெற்ற 47வது ஜூனியர் தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு வெள்ளிப் பதக்கங்களையும், மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்றிருந்தார். தவிர, அதற்குமுன், மார்ச் 2021ல் நடைபெற்ற லாட்வியன் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப்பில் வேதாந்த் வெண்கலப் பதக்கத்தையும் வேட்டையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனது மகனின் வெற்றியை, நடிகர் மாதவன் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து வெள்ளியை வேட்டையாடிய வேதாந்துக்கு நடிகர்கள் சூர்யா, பிரசன்னா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.