திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வாணியம்பாடி மற்றும் ஆந்திர எல்லையில் உள்ள பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முன்னதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வெள்ளப்பெருக்கில் மாதனூர் உள்ளி இடையே தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக மணலைக்கொட்டி சிமெண்ட் பைப்புகளை வைத்து தரைப்பாலம் அமைத்தது. இந்த சாலையையே மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில், இன்று காலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த தற்காலிக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால், குடியாத்தம் மற்றும் மாதனூர் இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மாதனூர் பாலாற்றில் மேம்பாலம் அமைத்து பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதே போன்று ஆம்பூர் ரெட்டிதோப்பு ரயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் முழங்கால் அளவு தேங்கியதால் நடந்து மட்டுமல்லாமல் இருசக்கர வாகனத்திலும் செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆம்பூர் நகராட்சி உடனடியாக நீரை அகற்றி போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.