திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சிமன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த மனோகரன் இருந்துவந்தார். இவர், தமது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு காரில் திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது, எதிரே வந்த லாரி, காரின் மீது நேருக்கு நேர் மோதியதில் கார் நிலைக்குலைந்தது. இதனையடுத்து, காரின் மீது லாரியை மோதி விபத்துக்குள்ளாக்கிய கும்பல், காருக்குள் இருந்த மனோகரனை, மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்னே சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றது. இந்த வெறிச்செயலில் சம்ப இடத்திலேயே உயிரிழ்ந்த மனோகரனின் உடலை தகவலறிந்து வந்த காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். இந்த கொலைத்தொடர்பாக காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்தநிலையில், கொலை சம்பவத்தின் போது கார் மீது லாரி மோதும் சிசிடிவி காட்சிகள் வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சியில், நிகழ்ச்சி முடிந்து தமது குடும்பத்தினருடன் சாலையின் இடதுபுறமாக மனோகரன் கார் வந்து கொண்டிருக்கிறது. அப்போது எதிரே சாலையின் வலதுபுறத்தில் வந்த லாரி மனோகரனின் காரை வழிமறித்து நின்று மனோகரன் காரில் உள்ளாரா என்பதை உறுதி செய்து கொண்டு காரை பின்நோக்கி முட்டி செல்கிறது. பின்னர், லாரியில் இருந்து அடையாளம் தெரியாத கும்பல் இறங்குவது வரை இந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்திற்கிடமான சிலரிடம் காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதும் அதிகாரப்பூர்வமான தகவல் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.