இப்போதே சூரியன் நன்கு சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. போகிற போக்கைப் பார்த்தால் வெயிலைத் தாக்குப்பிடிப்பது என்பது எல்லோராலும் முடியாத காரியம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் சருமமும், உடலும் பாதிப்படையும். இந்தக் கோடைகாலத்தில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான குறிப்புகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
சோப்பைத் தவிருங்கள்
நம் உடலில் அடிக்கடி சோப்பு பயன்படுத்துவதால் சருமம் வறண்டு போகும். அதற்குப் பதிலாக Detergent, Fragrant இல்லாத ஃபேஸ்வாஷ்களைப் பயன்படுத்தலாம். பி.ஹெச். அளவு 7-8 இருக்கும் ஃபேஸ்வாஷாகப் பயன்படுத்துவது சிறந்தது அல்லது பச்சைப் பயறு மாவைப் பயன்படுத்தலாம். அதைப் பயன்படுத்தும்போது, முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாகும். முகம் வறண்டு போகாது.
கற்றாழை மகத்துவம்
அதேபோல், வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகத்தை வெயில்படாதவாறு மூடிக்கொள்ள வேண்டும். குடை பிடித்தோ துப்பட்டா உள்ளிட்ட துணிகளைக் கொண்டு முகத்தை முழுதாக மூடிக்கொண்டோதான் செல்லவேண்டும். ஏனென்றால், வெயில் நம் முகத்தில் நேராகப்படும்போது முகம் சிவந்துவிடும். பிறகு, சிறிது நேரத்தில் அது கறுப்பாக மாறிவிடும். அது மறையவும் நீண்ட நாட்கள் எடுக்கும். அதனால், கண்டிப்பாக முகத்தை மூடியபடியே செல்வதுதான் நல்லது. மேலும், நம்முடைய குளிர்சாதனப் பெட்டிகளில் கற்றாழை ஜெல்களை வைத்திருப்பதும் அவசியமானது. கற்றாழையை வெட்டி, அதன் உள்ளிருக்கும் பசையை மட்டும் எடுத்து 3 முதல் 4 தடவை நன்றாகத் தண்ணீரில் போட்டு அலசிவிட வேண்டும். அப்போதுதான் அதிலிருக்கும் அமிலத் தன்மை போகும். பின்பு அதனை ஒரு கப்பில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடலாம். இதனை, தேவைப்படும்போது நாம் பல வகைகளில் பயன்படுத்தலாம்.
வெண்ணெய் மசாஜ்
நீண்டநேரம் வெயிலில் சென்றுவிட்டு வரும்போது முகம் களைத்துப்போய் வாடி இருக்கும். அப்போது, கற்றாழையை நன்றாக மிக்ஸியில் போட்டு அடித்து, அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும். பின்பு, வெறும் நீரில் கழுவினால் போதும். முகம் குளிர்ந்து பழைய நிலைக்குத் திரும்பும். அதுபோல், கற்றாழையுடன் 4 சொட்டு பாதாம் எண்ணெய்யைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்துவிட்டு, அதனை முகத்தில் பூசி மசாஜ் செய்துவந்தால், முகம் பளபளவென்று பொலிவுடன் இருக்கும். இதனை தினமும் 5 நிமிடம் செய்தால் போதும். எப்போதும் முகம் இளமையாக இருக்கும். முகம் வறண்டு போகவும் வாய்ப்பே இல்லை. மேலும், சன் ஸ்கிரீன் லோஷன் போடுவது மிகவும் அவசியம். நாளொன்றுக்கு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை முகம் கழுவிவிட்டு, முகத்தை நன்கு துடைத்துவிட்டு, டோனர் போட்டு 1 நிமிடம் கழித்து சன் ஸ்கிரீன் லோஷன் தடவவேண்டும். இப்படி நாளொன்றுக்கு 3 முறையாவது தடவவேண்டும்.
அதுபோல், வெண்ணெய்யை வைத்து முகத்தை நன்றாக மசாஜ் செய்துவிட்டு, பின் பாசிப்பயறு மாவும் ரோஸ் வாட்டரும் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவி எடுத்தால், முகம் பளபளவென இருக்கும். இதை, வாரம் ஒருமுறை செய்தால்கூடப் போதுமானது. அதுபோல், கடைகளில் விற்கும் பாதாம் அல்லது அவகோடா கிரீம்களை வைத்தும் முகத்தை மசாஜ் செய்யலாம். அதன்பின் கற்றாழை, சந்தனம் போன்றவற்றைப் பூசி சிறிதுநேரம் கழித்துக் கழுவினால் முகச் சருமம் பொலிவாகவும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இவையனைத்தையும் செய்தாலே இந்தக் கோடைகாலத்தில் அதிக வறட்சியும் அதிக எண்ணெய்ப் பிசுக்கும் இல்லாத அழகான முகத்தைப் பெறலாம்.
lll