வெகுநாட்களாக ஒரு காதலனைத்
தேடிக்கொண்டு இருக்கிறேன்
மானே தேனே வேண்டாம்
மயக்குறு வார்த்தைகள் வேண்டாம்
தலைகோதும் நேசம் வேண்டாம்
தோள்சாய்க்கும் ஆறுதல் வேண்டாம்
தாயாக வேண்டாம்
தந்தையாகவும் இருக்க வேண்டாம்
அண்ணனைப் போலவும் வேண்டாம்
நான் சிரிக்கும்போது
என்னைவிட சத்தமாக சிரிக்க வேண்டும்
நான் அழும்போது
நிதானமாக இருந்தாலே போதும்
ஹார்மோன் சமமின்மையால்
வெடித்தழும்போது பொறுமையாக இருந்தால் போதும்
கோவத்தில் வெடிகுண்டாக
வார்த்தைகளை வீசும்போது
குறைந்தபட்சம் இடம்நீங்கி
இயல்பாகத் திரும்ப வேண்டும்
இப்படியொருவன் இறந்துவிட்டான் என்றோ
பிறக்கவேயில்லை என்றோ
சொல்லிவிடாதீர்கள்