ஒரு நதியை வீட்டில் இருந்தே
எட்டிப் பிடித்தேன் – ஒரு
தண்ணீர்க் குழாய்போல்
வளைந்து வந்த நதியை என்
தொட்டிச் செடி நோக்கித் திருப்பி நீர் பாய்ச்ச
எங்கிருந்தோ முளைத்து வந்தது
மழைக் காளான் ஒன்று…
அதனடியில் குளிர்தாளாது
நின்றிருந்த மண்புழு
முகத்து நீரை வழித்துவிட்டுக் கொண்டது!
மேசையில் இருந்த காகித ரோஜா
கோபமாய் முகம்திருப்ப
கோப்பையில் இருந்த சொற்ப மது
மெல்ல தன்னை நீர்த்துக்கொண்டதாக
நீலா எனக்குச் சொன்னாள்…
ரஞ்சனின் பாடப்புத்தகத்தை
சிறிதே நதி நனைத்தபோதிலும்
அவன் அழவே இல்லை…
சின்ன பாறையில்
விளக்குத்திரியை நனைத்ததைக் கண்டிக்க
கோபத்தில் ஓடிபோனது
பொல்லாத நதி!