நாடு முழுவதும் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்ட நடிகர் விவேக்கிற்கு, ஒரு கோடி மரங்களை நடவேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. ஆனால், மாரடைப்பு காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி காலமானார். கொரோனாவுக்கு எதிராக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்திய விவேக், தானும் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் உருவப்படம் திறந்துவைக்கப்பட்டது. மேலும் அவர் விட்டுச் சென்ற 1 கோடி மரக்கன்றுகள் நடும் பணியை வகையில் இன்று விவேக்’ஸ் கிரீன் கலாம் என்ற பெயரில் மரம் நடும் திட்டத்தை, அவரது பி.ஏவும் நடிகருமான செல்முருகன் இன்று காலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நண்பர்கள் துணையுடன் தொடங்கினார். நடிகர் விவேக்கின் இந்த கனவுப் பயணத்தை திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் தற்போது கையிலெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.