ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன். இவர், இன்று (திங்கட்கிழமை) விடியற்காலை தண்ணீர் பாய்ச்ச விளைநிலத்துக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவிலிருந்து சுமார் 16 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று இருப்பதை அறிந்துள்ளார். இதுகுறித்து கொண்டபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொள்ளையடித்த நபர் இரண்டு தினங்களாக வீட்டை நோட்டமிட்டதாகவும் இதன் பின்னரே கொள்ளைச் சம்பவம் திட்டமிட்டு நடந்திருக்கலாம் என கிராம மக்கள் கூறிவருகின்றனர். தவிர இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள இடத்தில் இதுபோன்ற கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.