ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக அளவு உரத் தட்டுப்பாடு உள்ளதாகவும், அதிலும் குறிப்பாக யூரியா தட்டுப்பாடு அதிகமாக இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல, வேர்க்கடலை விதை தட்டுப்பாட்டால் விவசாயிகள் வேர்க்கடலை பயிரிட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே விவசாயிகளுக்கு வேர்க்கடலை விதைகள் மற்றும் யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் திடீர் மின்தடையால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். தவிர, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவு முறைகேடுகள் நடக்கிறது. அதனை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆவின் பால் சற்று தரம் குறைந்துள்ளது. அதன் தரத்தை மேம்படுத்திட உரிய ஆய்வு செய்ய வேண்டும். மேலும் சுற்றுசூழலை பாதிக்கும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டத்தில் வலியுறுத்தினர்.