இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எப்படி பெரும் பணக்காரர்களை உருவாக்கியதோ, தற்போது தக்காளி விவசாயிகளை கோடீஸ்வரராக்கி வருகிறது. அரிசி, கோதுமை போன்று அடிப்படை உணவு பொருளாக தக்காளி இல்லாவிட்டாலும், இந்திய சமையலில் தக்காளியின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
அதிகப்படியான பருவமழை, தக்காளி விளைச்சலில் பாதிப்பு என பல காரணங்களுக்காக சந்தைக்கு வரும் தக்காளியின் விலை சப்ளை டிமாண்ட் பிரச்சனை காரணமாக பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இது மக்களுக்கு பெரும் சுமையாக இருந்தாலும், விவசாயிகள் பல வருடங்களாக எதிர்கொண்ட இழப்பை தக்காளி விலை உயர்வு மூலம் ஈடு செய்து வருகின்றனர்.
கர்நாடகா, புனே விவசாயிகளை தொடர்ந்து தற்போது தெலுங்கானா-வை சேர்ந்த விவசாயிகள் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை தக்காளி மூலம் கடந்த இரு மாதத்தில் சம்பாதித்து கோடீஸ்வரராக மாறியுள்ளனர். மேதாக் பகுதியை சேர்ந்த மஹிபால் ரெட்டி என்பவர் கடந்த 2 மாத தக்காளி விற்பனையில் சுமார் 1.8 கோடி ரூபாய் வரையில் சம்பாதித்துள்ளார்.
நேதாக் பகுதியில் இருக்கும் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி விலை உயர்வால் அதிகப்படியான தொகையை சம்பாதித்துள்ளனர், ஆனால் மஹிபால் ரெட்டி என்பவர் தான் அதிகப்படியாக 1.8 கோடி ரூபாய் வரையில் சம்பாதித்துள்ளார். விகாராபாத் பரிகி மண்டலத்தைச் சேர்ந்த ஒய் நரசிம்ம ரெட்டி என்ற விவசாயி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் முட்டைக்கோஸ் விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியால், 15 லட்சம் ரூபாய் அளவிலான இழப்பைச் சந்தித்தார். இந்த நிலையில் தக்காளி மூலம் தற்போது 30 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார், மேலும் ரூ.70 லட்சம் மதிப்பிலான தக்காளிகளை கைவசம் வைத்துள்ளார். இதன் மூலம் தக்காளி கோடீஸ்வரர் பட்டியலில் இவரும் சேர்ந்துள்ளார். மேடக் மாவட்டம் ஜின்னாரம் மண்டலத்தைச் சேர்ந்த பி ரகுநந்தன் என்பவர் தனது மூன்று ஏக்கர் நிலத்தில் சரியான நேரத்தில் தக்காளியை பயிரிட்டதன் மூலம் சுமார் 80 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதித்துள்ளார்.
விகாராபாத்தைச் சேர்ந்த முகமது ஹனிஃப் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று தக்காளி விளைச்சலில் வெற்றி கண்ட நிலையில், தக்காளி விலை விண்ணை முட்டிய இந்த காலத்திலும் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாயை தக்காளி மூலம் சம்பாதித்துள்ளார்.