முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடைகால கனமழையின் காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளன. நெல் மூட்டைகளை மூடிவைக்க போதுமான தார்பாய்கள் இல்லாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பாக வைக்காததால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு மக்களின் வரிப் பணம் வீணாவது இந்த விடியா ஆட்சியில் தொடர்கதையாகி வருகிறது. எனவே, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையினால் பாதிப்படைந்த சேதங்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இந்த மக்கள் விரோத அரசை வலியுறுத்துகிறேன்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.