குழந்தைப் பேறு இல்லாமல் போவதற்குப் பல காரணங்கள் உண்டு. கணவனுக்கோ, மனைவிக்கோ அல்லது இருவருக்குமோ உள்ள குறைகள் காரணமாகக் குழந்தைப் பேறு இல்லாத நிலை இருக்கலாம். மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக அத்தகைய குறைகளைச் சரிசெய்ய வியக்கத்தகு நவீன சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குழந்தைப் பேறின்மை பிரச்சனைகளுக்குத் தீர்வாக தோன்றியிருப்பதுதான் ‘வாடகைத் தாய்’ என்ற புதிய முறை. கருவைச் சுமக்க முடியாத அளவுக்குக் கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கருப்பையில் வைத்துக் கருவை வளர்த்துக் குழந்தைப் பேறு அளிக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்துக் குழந்தையாகப் பெற்றுத்தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள்.
தாயின் இழப்புக்கு யார் பொறுப்பு?
குழந்தையை விரும்பும் தம்பதியினரே, கர்ப்பம் முதல் பிரசவம் வரை வாடகைத்தாயின் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக்கொள்வர். பிறக்கப்போகும் குழந்தைக்கு மனநலப் பிரச்சினை மற்றும் உடல் ஊனப் பிரச்சினை எதுவாக இருந்தாலும் வாடகைத்தாய் பொறுப்பாக மாட்டார். அதற்கும் குழந்தையை விரும்பும் தம்பதியினரே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
வாடகைத் தாய்மார்கள் கர்ப்பத்தைச் சுமக்கும் காலத்தில் அவர்களின் வாழ்வில் நிகழும் பல்வேறு சூழல்கள் அவர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். தவறான முடிவெடுத்துக் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறோமோ என்ற மனசஞ்சலம் ஏற் படலாம். அதன் பொருட்டு அவ்வப்போது வாடகைத் தாய்மார்களுக்கு கவுன்சலிங் அளிக்கப்படுகிறது.
தற்போது வாடகைத்தாய் விவகாரங்கள் வெறும் புரிந்துணர்வு அடிப்படையில்தான் நடக்கின்றன. பெரும்பாலோர் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களையே வாடகைத் தாயாக ஏற்றுக்கொள்ளத் துணிகிறார்கள். இந்திய மருத்துவத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது அனுமதிக்கப்
பட்டுள்ளதே தவிர இதற்கான சட்டங்கள் இன்னும் உருவாக்கப்
படவில்லை.
திருமணம் புரியும் தம்பதிகளில் நூற்றுக்குப் பத்து பேர் கருவுறல் பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலைமை இருந்தும்கூட இன்னமும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது குறித்த தெளிவான சட்டமும் நெறிமுறையும் உருவாக்கப்படவில்லை. எதிர்காலத்தில் வாடகைத்தாய் விவகாரம் பல குழப்பங்களை ஏற்படுத்தும். உதாரணமாக ‘நான்தான் குழந்தையைப் பெற்றுக்கொடுத்தேன். எனவே, உங்கள் சொத்தில் பங்கு வேண்டும்’ என்று வாடகைத் தாய் வழக்குத் தொடரக் கூடும்.
யார் யாரெல்லாம் வாடகைத் தாயாக இருக்க முடியும்? பேறு காலத்தில் வாடகைத்தாய் இறந்தால் அவரது குடும்பத்துக்கு யார் இழப்பீடு கொடுப்பது? குழந்தையை ஏற்கத் தம்பதி மறுத்தால் குழந்தையை யார் ஏற்றுக்கொள்வது? இவற்றையெல்லாம் நெறிமுறைப்படுத்த வேண்டும். எனவே, சகல அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
வாடகைத் தாய் ஒப்பந்தம் (Surrogacy Agreement)
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்புகிறவர்கள் அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வது இன்று நடைமுறையில் உள்ளது. குழந்தை வேண்டுபவரின் பெயர் மற்றும் விவரங்கள், வாடகைத் தாயின் பெயர் மற்றும் விவரங்கள், எந்தக் காரணத்துக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள், எந்த வகையில் வாடகைத் தாய் பராமரிக்கப்படுவார், அதற்கான ஈட்டு ஊதியம், கருச்சிதைவு உள்பட ஏதேனும் அசம்பாவிதம் சம்பவித்தால் அந்நிலையைச் சமாளிக்கும் விதம், ஏதேனும் சட்டப் பிரச்னை ஏற்படும் எனில் எந்த நீதிமன்றத்தை (Jurisdiction) அணுகுவது என்பது போன்ற பல விஷயங்கள் குறித்துத் தெளிவான ஒப்பந்தம் இயற்றுவது அவசியம். பொதுவாக 18 வயது நிரம்பியவரே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். இதிலும் அப்படியே. ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுபவர்கள் சுயமான முடிவு எடுத்திருக்க வேண்டும். எந்தவிதக் கட்டாயமும் இருக்கக் கூடாது. வாடகைத் தாயின் கணவரின் கையொப்பமும் தேவை. இதன் அடிப்படையிலேயே இன்று வாடகைத் தாய் முறை அமலில் உள்ளது. இதற்கான சட்டப் பரிந்துரையில், இன்றைய தேதியில் இருப்பது போல வெளிநாட்டவர்களின் அனுமதி தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.
பேபி மன்ஜி வழக்கு
(Manji Yamada Vs Union India) 2008 13 Scc 518 (Sc) – இந்த வழக்கு, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற யத்தனிக்கும் வெளிநாட்டுத் தம்பதி, குழந்தைப்பேறு காலத்தில் பிரிந்துவிடும் ஒரு நிலையில், குழந்தைக் காப்பாளர் உரிமை யாருக்கு என்ற வினா எழுந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு குழந்தையின் தந்தையிடம் காப்பாளர் உரிமை கொடுக்கப்பட்டது. அந்நாளில் ஊடகங்களில் பெரும் செய்தியாக இடம்பிடித்த வழக்கு இது. இது போல சில வழக்குகளில் குழந்தையின் குடியுரிமை பிரச்சினை நீதிமன்றக் கதவுகளைத் தட்டி தீர்வு பெற்றதைப் பார்த்துள்ளோம். குஜராத் உயர் நீதிமன்றத்தில், ஒரு ஜெர்மன் தம்பதியின் தாய்க்குக் கருமுட்டை உற்பத்தியாகாததால், வேறொருவரின் கருமுட்டையுடன் தந்தையின் விந்தணுவுடன் இந்திய வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தையின் குடியுரிமை குறித்து வழக்கு வந்தது. தீவிர முயற்சிக்குப் பிறகு இந்திய பாஸ்போர்ட் பெறப்பட்டது.
புதிய சட்டம்
புதிய சட்டப் பரிந்துரையில் வெளிநாட்டவர், தனிநபர், ஓரினச் சேர்க்கையாளர் ஆகியோர் வாடகைத் தாய் அமர்த்துவது தடை செய்யப்படலாம். இன்றைய நிலையில் 40 சதவீதம் வெளிநாட்டவரும் 30 சதவீதம் தனிநபர்களும் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள் என்பது Centre for Social Research (CSR) அமைப்பின் ஆய்வு முடிவு. புதிய சட்ட மசோதாவின் பரிந்துரையில் வாடகைத் தாயாக இருக்க விரும்பும் பெண், கணவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்றுள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண் – கணவனால் கைவிடப்பட்ட பெண் போன்றோர்தான் வறுமையின் காரணமாக வாடகைத் தாயாக செயலாற்ற ஒப்புக்கொள்கிறார்கள்.
இதில் பலர் கணவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெறாமல் இருப்பவர்கள். இப்படியிருக்கும் நிலையில் என்ன செய்வது என்கிற பதில் சொல்லப்படாத நிலை. வாடகைத் தாயாகச் செயல்படச் சம்மதிக்கும் பெண்ணே அதற்கான ஊதியத்தை நிர்ணயிக்க வழிவகை செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி அறிவு இல்லாத அல்லது குறைந்த அளவே உலக அறிவுள்ள பெரும்பாலான பெண்கள் எவ்வாறு இதைச் சரிவர நிறைவேற்ற இயலும்? அதோடு, வாடகைத் தாயாகச் செயல்படும் பெண்ணின் உடல்நலம் பேண எவ்விதப் பரிந்துரையும் இல்லை. குழந்தை ஈன்றவுடன் பிரியும் சூழலில் ஏற்படும் மன உளைச்சலுக்கான ஆலோசனை அல்லது கருச்சிதைவின் மூலம் ஏற்படும் உடல், மனரீதியான விளைவுகள் குறித்தும் சரிவர விளக்கவில்லை.
இவை தவிர, நிறைய பெண்கள் கருமுட்டை தானத்தில் ஈடுபடுவது குறித்தும் விளக்கப்பட வேண்டும். நம் நாட்டில் பெண்களுக்காகப் பல பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எனினும், இச்சட்டங்களால் பயன்பெறும் பெண்களின் பார்வையில் அவை இயற்றப்படாமல் போவதே பல்வேறு சிக்கல்களுக்குக் காரணமாகிறது. தாய்மையைப் போற்றும் இந்தத் தேசம், வாடகைத் தாய், சேய், குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் ஒரு தெளிவான சட்டப் பாதுகாப்பு அளிப்பது அவசியம்.
உலக அளவில், வாடகைத் தாய் முறை அதிகம் இருக்கும் நாடு இந்தியா என்று சொல்லப்படுகிறது. அதனால், வாடகைத் தாய் சட்ட (ஒழுங்குமுறை) மசோதா 2019, ஜூலை மாதம் மக்களவையில் முன்வைக்கப்பட்டது. வாடகைத்தாய் கருத்தரித்தல் முறையைச் செயல்படுத்தும் மருத்துவமனைகளை நடத்துபவர்கள், இந்தச் சட்டத்தின்படி பதிவு பெற்ற பின்னரே அதை நடத்த முடியும்.
இந்த மருத்துவ முறையில் மகப்பேறு மருத்துவர், எம்ப்ரியாலஜிஸ்ட் ஆகியோர் வாடகைத்தாய் நடைமுறைக்காக வியாபாரரீதியாகச் செயல்படக் கூடாது. இது தொடர்பாக விளம்பரம், பிரச்சாரம், ஊக்கமளிப்பது, இப்படி எந்த வகையிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது.
சட்ட நெறிமுறைகள்
வாடகைத்தாய் ஏற்பாடு செய்யும் நோக்கம் பொதுநல அக்கறையோடு இருக்க வேண்டும். வாடகைத் தாயை நியமிக்க முடிவெடுக்கும் தம்பதி இருவரில் ஒருவருக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை உறுதிப்படுத்தும் எழுத்துப்பூர்வமான சான்றை, மாவட்ட மருத்துவக் குழுமத்தில் இருந்து பெற வேண்டும். இந்த மருத்துவக் குழுமத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். வாடகைத்தாயாக வருபவருக்குக் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர், பின்னர் என 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்.
வாடகைத் தாயாக நியமனமாகும் பெண்ணின் வயது 25 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தம்பதி, அவர்களின் நெருங்கிய உறவுகளை மட்டுமே வாடகைத் தாயாக அமர்த்திக்கொள்ள வேண்டும். சில சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்குக் கருமுட்டை வளர்ச்சி இல்லாதபோது, வாடகைத் தாயாக வருபவர், தன் கருமுட்டையையும் தானமாகக் கொடுப்பார்.
புதிய சட்ட மசோதாவின்படி, அந்தப் பெண் தனது கருமுட்டையைத் தானமாக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை. சம்பந்தப்பட்ட தம்பதியின் கருமுட்டை, விந்தணு இணைந்த கருவைத் தனது கருப்பையில் வைத்து வளர்த்துக்கொடுத்தாலே போதும். ஒரு பெண், தன் வாழ்நாளில் ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும். குழந்தை வேண்டுபவர்களுக்கும் வாடகைத் தாய்க்கும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். அத்தகைய சான்றிதழை, மேலே குறிப்பிட்டபடி தகுதி வாய்ந்த அதிகாரிகள் வழங்குவார்கள்.
அதேபோல் வாடகைத்தாயை நியமிக்கும் தம்பதிகளுக்கும் விதிமுறைகள் உள்ளன. வாடகைத் தாயை ஏற்பாடு செய்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி அல்லது இருவரில் ஒருவர் குழந்தைப்பேறுக்குத் தகுதியான உடல்நிலை இல்லாதவராக இருக்க வேண்டும். தம்பதியில், மனைவியின் வயது 23 வயதிலிருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும், கணவனின் வயது 26 வயதிலிருந்து 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தம்பதி இந்தியராகவும் திருமணமாகி ஐந்து வருடங்கள் முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். தம்பதிக்கு ஏற்கெனவே குழந்தை இருக்கக் கூடாது. தத்துக் குழந்தையோ, வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்ட வேறு குழந்தையோ இருக்கக் கூடாது. தம்பதிக்கு இயற்கையான முறையில் பிறந்த குழந்தை இருந்து, அந்தக் குழந்தை குணப்படுத்த முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ மனநலம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றில் குறைபாடு இருந்தாலோ, மாவட்ட மருத்துவக் குழுமத்திடம் அதற்கான சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தால், அவர்கள் சொந்தக் குழந்தை இருந்தாலும் வாடகைத் தாயை நியமித்துக்கொள்ள முடியும்.