திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் தேசிய அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு இருக்கும் 3 அலகுகளின் மூலம் தலா 500 வீதம் நாள் ஒன்றுக்கு 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில், முதல் அலகில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்போது 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் தேவையான நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி வெகுவாக குறைந்து வருவகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு, இந்த கோடை வெயிலை மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்தசமயத்தில், வல்லூர் அனல் மின் நிலையத்தில் இது போன்று அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.