சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தேனி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தக்காளி கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில், தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துவருகின்றனர். ஏற்கனவே, தமிழக தென்மாவட்டங்களில் பெய்த மழையால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த தக்காளி வீணானது. இதனால், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவதால் தக்காளி விலை உயர்ந்தது. இந்தநிலையில், கடந்த சில தினங்களாக அசானி புயல் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் மழை பெய்து வருவதால் இனி வரும் நாட்களிலும் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, மொத்த விலைக்கடைகளில் 2 நாட்களுக்கு முன் ஒரு பெட்டி ரூ.550க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று பெட்டி ரூ.700க்கு விற்பனையாகிறது. அதேபோல, சில்லரை விற்பனை கடைகளில் ரூ.50க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, இன்று 42 லாரிகளில் மட்டுமே கோயம்பேடு மார்கெட்டுக்கு தக்காளி கொண்டுவரப்பட்டு விற்பனையாகி உள்ளது.