நடிகை வனிதா மூன்றாம் திருமணம் செய்துகொண்டு வலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். அவருக்கு எதிர்ப்பு வலுப்பதும், அதற்கு அவர் திருப்பி அடிப்பதும் என்று நேரம் போனது. சூர்யா, விஜய் என்று பெரிய நடிகர்களை வம்பிழுத்து பிரபலம் அடைந்தார் மீரா மிதுன். இவர்களின் மன நிலையின் பின்னணி என்ன? மன நல மருத்துவர் டாக்டர் ஷாலினியிடம் கேட்டோம்.
டாக்டர் ஷாலினி, வனிதா பெண்ணியவாதியா?
தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுவதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. அது என் கொள்கைகளுக்கு முரண்பட்டது. ஒரு பெண்ணாக அவர் பேசும் வார்த்தைகள், எடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் இவற்றை வைத்துப் பார்த்தால் அவர் ஒரு நிலையில்லா மனநிலை கொண்டவராகவே தெரிகிறார். ஒரு பெண்ணின் உறவுகள் சரியில்லை எனும் போது தனியாக இருத்தல், சிங்கள் மதர்(single mother) ஆக இருத்தல், மறுமணம் செய்துகொள்ளுதல் போன்றவை முற்போக்குச் சிந்தனையாக கருதப்பட்டாலும் ஒரு ஆணிடம் இந்தக் கேள்விகளைக் கேட்பீர்களா எனக்கேட்பதும், ஒரு ஆண் இரண்டு திருமணம் செய்வது தவறில்லை என்பதும், மிகவும் ஆண்வழி சமூகத்தில் மூழ்கிப்போன கருத்தாகத் தெரிகிறது. அவர்கள் பெண்ணியம் மற்றும் ஆண் வழிச் சமூகத்திற்கான வேறுபாடு அறியாமல் தன்னுடைய சுய லாபத்திற்காக தனக்கு வேண்டியவற்றை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலையில் இருக்கக்கூடியவர்களாக இருக்கலாம். மேலும் பாதிக்கப்பட்ட பெண் இப்படித்தான் நடந்து கொள்வாள் எனும்போது அவர்களை மேலும் குற்றம் சாட்டி இது சரி, இது தவறு என்று கூறுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை.
வனிதாவை எதிர்க்கும் சூர்யாதேவி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றவர்கள் ஒழுக்கத்தை போதிக்கிறார்களா?
வனிதாவை எதிர்க்கும் பெண்கள் யார் யார் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தையே வலியுறுத்துகிறார்கள். இந்த விஷயத்தில் குறிப்பாக வனிதாவும் ஒருவனுக்கு ஒருத்தியாகவே வாழ்கிறார். ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு அவரோடு குடும்பம் நடத்தவே எண்ணுகிறார். அந்த விதத்தில் பார்த்தால் அவர்களும் ஆண்வழி சமூகத்தின்கீழ் இருக்கிறார்கள் எனலாம். மிகவும் முற்போக்கான பெண் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? எதற்காக மோதிரம் போட்டுக்கொள்ள வேண்டும்? அவர் ஏற்கனவே உள்ள கட்டமைப்புக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள முயற்சிக்கிறார். பெண்களே திரும்பத் திரும்ப ஆணாதிக்கத்தை வலியுறுத்துவதாக கருதுகிறேன். இதில் சம்பந்தப்பட்ட அனைத்துப் பெண்களும் ஆணாதிக்கத்தின் அலை களாகவே கருதுகிறேன். அவர்களுக்கே தெரியாமல் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒரே விஷயத்தை தான் பேசுகிறார்கள்.
மீரா மிதுன், சூர்யாதேவி போன்றோரின் மன நிலை என்ன?
எனக்கு ஒரு கருத்து உள்ளது, அதை நான் கூறுகிறேன் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் அதில் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு, ஆத்திரப்படுவது, தான்தான் நீதியை நிலைநாட்டப் போகிறேன் எனக் கூறுவது எல்லாம் முரண்பாடானது. எல்லோருக்கும் விளம்பரம் தேவைப்படுகிறதோ? அந்த அளவு பெண்கள் வெட்டியாக இருக்கிறார்களா? எல்லோரும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என எண்ணுகிறார்களா என்ற கேள்விகளும் எழுகின்றன.
இது பெண்ணுரிமை, பெண் சமத்துவம் தொடர்பானதா?
இதில் சம்பந்தப்பட்ட எல்லோரும் பேசுவதை வைத்துப் பார்க்கும்போது பெண்ணின் அடிமைத்தனத்தை தங்களுக்கே தெரியாமல் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். குறிப்பாக வனிதா திருமணம் ஒன்றை செய்து பார்க்க வேண்டும் என எண்ணுவது, அதற்காக அலங்காரம் செய்து கொள்வது. இம் மாதிரியான பழக்க வழக்கங்கள் பெண்ணிய அடிமைத்தனத்தையே வலியுறுத்துகிறது.
பெண்கள் கட்டுப்பாடுகளை உடைத்து வெளி வருகிறார்களா?
பெண்கள் கட்டுப்பாடுகளை உடைக்கவே இல்லை. பெண்கள் அவர்களாகவே கட்டுப்பாடுகளை ஏற்கிறார்கள். இதுதான் பெண் அடிமைத்தனம் எனத்தெரியாமல் சத்தமாகப் பேசி விட்டால் நான் சுதந்திரமான பெண் என நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் சத்தமாகப் பேசக் கூடிய பெண் மேலும் மேலும் தன்னை அடிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தானே செய்கிறாள். ஒரு ஆண் இரண்டு மனைவி வைத்திருக்கிறார் என ஒரு பெண்ணே சொல்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?
சமூக மதிப்பீடுகள் சரிந்திருக்கிறதா?
சமூக மதிப்பீடுகள் தறிகெடவும் இல்லை. சமூக மதிப்பீடுகள் மாறவும் இல்லை. அதே சமூக அமைப்புகளில் திரும்பத் திரும்ப வலியவந்து அடிமைச் சங்கிலிகளைப் பெண்கள் தாங்களே மாட்டிக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதில் எந்தத் தடையும் மீறப்படவும் இல்லை. அந்தப்பெண் ஒருவனுக்கு ஒருத்தியாகவே வாழவேண்டும் என முயற்சிக்கிறார். விவாகரத்து வாங்காத ஆணைத் திருமணம் செய்துகொண்டாரே தவிர எந்த கலாச்சார மதிப்பீடுகளும் மாறவே இல்லை என்பதுதான் உண்மை.
வசைபாடுவது எந்த அளவுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது?
வசைபாடுவது ஆண்கள் பெண்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. பொதுவெளியில் கருத்து சொல்வதன் மூலம் வரும் விளம்பரத்தையும் முக்கியத்துவத்தையும் இவர்கள் விரும்புகிறார்கள். இந்த அளவிற்கு இது பேசுபொருளாக மாறியதற்குக் காரணம் இந்த சலிப்பான காலகட்டமே. அடுத்த வருடம் இவ்வாறு பேசியதை நினைத்து சிரிக்கக் கூட கூடும். இன்னும் பத்து வருடங்கள் கழித்து இதற்கு எந்த மதிப்பும் இல்லாமல் ஆகிவிடும். மொத்தத்தில் இது வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போல ஆகிவிட்டது.
– டாக்டர். ஷாலினி