திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து உப்பங்கழி ஏரி வழியாக வெளியேற்றப்படும் நச்சுக் கொதிநீரானது கடலில் கலப்பதால் கடல் மாசடைந்ததுடன், மீன்வளமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாழ்வாதாரத்தை இழந்த சென்னை எண்ணூர் பகுதி மீனவர்கள் அனல் மின் நிலையத்திலிருந்து நச்சி கொதிநீர் வெளியேற்றுவதைத் தடுக்க வேண்டும், தொழிற்சாலைக் கழிவுகளால் அடைபட்டுள்ள முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும், வடசென்னை அனல்மின் நிலையத்தால் வாழ்வாதாரத்தை இழ்ந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளனர். எனினும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த எண்ணூர் பகுதி மீனவர்கள் மீன்பிடித் தொழிலை புறக்கணித்து தங்களது படகுகளில் கறுப்புக் கொடி கட்டி கடல் மார்க்கமாக சென்று வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து கொதிநீர் வெளியேற்றப்படும் பகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.