இடதுசாரிகளின் கோட்டை என்றழைக்கப்பட்ட மேற்கு வங்கத்தைத் தனது களப்போராட்ட தால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டை யாக மாற்றியவர் மம்தா பானர்ஜி. தமிழகத்தின் இரும்புப் பெண்மணி ஜெயலலிதா என்றால், வங்கத்தின் சிங்கமாகக் கர்ஜிக்கிறார் மம்தா.
கொல்கத்தாவில் 1955ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் மம்தா. அவருக்கு 17 வயது இருக்கும்போதே அவருடைய தந்தை பிரமிளோஸிவர் பானர்ஜி இறந்துவிட்டார். இதனால் அவருடைய வாழ்க்கையை வறுமையும் நெருக்கடியும் சூழ்ந்தன. இளமைப் பருவத்திலேயே கடுமையான வாழ்க்கைப் போராட்டத்தில் தள்ளப்பட்டார். வாழ்க்கைப் போராட்டம் ஒரு புறம் இருந்தாலும், தனக்கான பாதையை செதுக்குவதில் கவனமாக இருந்துள்ளார் மம்தா.
களப்போராட்டமும் எளிமையும்:பொருளாதார நெருக்கடிக்கு நடுவே பள்ளிப் படிப்பை முடித்த மம்தா, ஜொக்மயா கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்துக்கொண்டிருந்தபோது சத்ர பரிஷத் ஒன்றியம் என்ற இளைஞர் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். கல்லூரியில் நடந்த தேர்தலில் இடதுசாரி சிந்தனை கொண்ட அமைப்பை வீழ்த்தி மம்தாவின் மாணவர் அமைப்பு வெற்றிபெற்றது. இந்த வெற்றிதான் அவர் அரசியலில் நுழைவதற்கு அடித்தளமிட்டது. எளிமை மற்றும் மக்களுடனான களப்போராட்டத்தால் அரசியல் பார்வையைத் தனது பக்கம் திருப்பிய மம்தா, தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பில் சேர்ந்து தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். அதன் பிறகு படிப்படியாக முன்னேறியவர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
யாராக இருந்தாலும் எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சலும், தைரியமும் நிறைந்த பெண்ணாக இருந்த மம்தாவைக் கண்டு அரசியல் தலைவர்களே மிரண்டனர். அதன் விளைவாக 1976 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் மகிளா காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் அந்தக் கட்சிக்கு எதிராகப் பலமாகக் குரலை உயர்த்தினார். அதன் விளைவாக 1984 ஆம் ஆண்டு ஜாதவ்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஜாம்பவனான சோம்நாத் சட்டர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டார். இந்தத் தேர்தல் இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு நடந்த தேர்தல் என்பதால் இந்தியா முழுவதும் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசியது.
இளம் வயதில் நாடாளுமன்ற நுழைவு:
அந்த அலையில் சோம்நாத் சட்டர்ஜி என்ற பெரும் சிகரத்தை வீழ்த்தி 21 வயதிலேயே நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். இதன் மூலம் மிக இளம் வயதில் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தவர் என்ற வரலாற்றுப் பெருமையை பெற்றார் மம்தா. அதன் பிறகு ஈழ விவகாரம், காஷ்மீர் விவகாரம் இவற்றால் காங்கிரசின் செல்வாக்குச் சரிந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோற்க, அதே ஜாதவ்பூர் தொகுதியில் நின்ற மம்தாவும் தோல்வி அடைந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த தேசிய முற்போக்குக் கூட்டணி அரசால் வெகு நாட்கள் ஆட்சியைத் தொடர முடியாத நிலையில், 18 மாதங்களில் கவிழ்ந்தது. அந்த நேரத்தில் அப்போது காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்றாலும் 1991 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜீவ் காந்தி படுகொலையால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இந்தத் தேர்தலில் தொகுதி மாறி போட்டியிட்ட மம்தா கொல்கத்தா தெற்குத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்துக்கு நுழைந்தார்.
தேர்தல் வெற்றி தோல்விகளைத் தாண்டி களத்தில் நின்று போராடுவது, எளிய மக்களோடு தன்னை இணைத்துக்கொள்வது என மம்தாவின் வளர்ச்சி வீறுநடை போட்ட நிலையில் நரசிம்மராவ் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் மனிதவளம், இளைஞர் முன்னேற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கு இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார் மம்தா பானர்ஜி. அவர் அமைச்சராக இருந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் உரசல் எழத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த கூட்டமொன்றில் பேசிய மம்தா, விளையாட்டு நலத்துறையில் தான் சொல்லும் திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியது கட்சியில் அதிர் வலைகளை ஏற்படுத்தியது.
அரசியலில் அசுர வளர்ச்சி:
கட்சிக்குள் உரசல் அதிக மானதைத் தொடர்ந்து மம்தா வுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பில் இருந்து அவர் விலக்கப்பட்டார். இவ்வாறு மத்திய அரசில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த நேரத்தில் மேற்கு வங்கம், உள்ளூர் அரசியலில் புகைந்து கொண்டிருந்தது. தொடர்ந்து அங்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தாலும், 1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி முறைகேடு செய்து ஆட்சிக்கு வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் மார்க்சிஸ்ட் கட்சி மீது குற்றம் சுமத்தியும், வாக்காளர் அடையாள அட்டை கோரிக்கையை முன்வைத்தும் மம்தா தலைமையில் பேரணி நடைபெற்றது. மேற்கு வங்கத் தலைமைச் செயலகத்தை நோக்கி நடந்த இந்தப் பேரணி போலீசாரால் ஒடுக்கப்பட்டது. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் இரு தரப்புக்கும் மோதல் வெடித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் மம்தாவின் மண்டை உடைந்தது. மண்டை உடைந்து ரத்தம் சொட்டும் நிலையில் சுருண்டுகிடந்த மம்தாவின் புகைப்படங்களைக் கண்டு நாடே அதிர்ந்தது.
இந்தத் தடியடி அவருடைய அரசியல் பயணத்தை ஒடுக்குவதற்காக நடத்தப்பட்டாலும் இதன் மூலம் அவர் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். இதனால், இளைஞர் மத்தியில் ஒரு போராளியாகக் காட்சி அளித்தார். இதனால், அவரின் அரசியல் செல்வாக்கு கிடுகிடுவென வளர்ந்தது. இப்படி தனித்த ஆளுமையாக மம்தா வளர்ந்ததால் காங்கிரசில் உட்கட்சிப் பூசல் அதிகமானது. இதனால் 1977இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய மம்தா காங்கிரஸ். மார்க்சிஸ்ட் கட்சியின் கைக்கூலியாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தார்.
அதிரவைத்த உண்ணாவிரதம்:
ஏற்கெனவே மம்தாவுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு காரணமாக அவருடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் குறுகிய காலத்தில் செல்வாக்கைப் பெற்றது.1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார் மம்தா. இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாகப் பெண் ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2005ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் தொழிற்சாலைகள் தொடங்க இடதுசாரி அரசு நிலங்களைக் கையகப்படுத்தத் தொடங்கியது. அரசின் இந்த நடவடிக்கை மம்தாவை மீண்டும் களச் செயல்பாட்டில் ஈடுபடவைத்தது. இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்கச் சட்டப்பேரவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நாற்காலிகளை உடைத்துக் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக நந்திகிராம், சிங்கூர் பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தின்போது நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் மம்தா. மம்தா பானர்ஜியின் இந்தப் போராட்ட முறை அவரை ‘வங்கப் புலி’யாக மாற்றியது. இது இடதுசாரி அரசின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
முதல் பெண் முதல்வர்:
2011ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவுசெய்தார் மம்தா பானர்ஜி. அம்மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளில் 227 இடங்களில் மகத்தான வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் மேற்குவங்கத்தின் முதல் பெண் முதல்வராகப் பொறுப்பேற்றார் மம்தா பானர்ஜி.மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நான் மீண்டும் வந்தால் முதல்வராகத்தான் வருவேன் என அவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு கூறியதை நிறைவேற்றியும் காட்டினார். 2011ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் முதலமைச்சராக இருந்துவருகிறார் மம்தா பானர்ஜி. இப்படி எளிமையும் களப்போராட்டமுமாகத் தனக்கென ஒரு சிறப்பு அடையாளத்தைக் கொண்டிருந்தாலும் உறுதியான கொள்கைப் பிடிப்பு இல்லாதவர் என்ற விமர்சனமும் அவர் மீது உண்டு. ஆரம்பத்தில் பா.ஜ.க.வையும் மோடி அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் தற்போது காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கையில் எடுத்துள்ளார். குறிப்பாக பாஜகவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிற காங்கிரசை ஓரங்கட்டிவிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார் மம்தா.உதாரணமாக அவர் அண் மைக்காலமாக மேற்கொண்டு வரும் பல நடவடிக்கைகள், அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அவரது விருப்பத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. அதில் மேகாலயாவின் முன்னாள் முதலமைச்சர் முகுல் சங்மா உள்படப் பல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அக்கட்சியை விட்டு விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
இந்தச் சூடு ஆறுவதற்குள் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரைச் சந்தித்துவிட்டு வந்த மம்தாவிடம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு சரத் பவார் தலைமையேற்க வேண்டுமென நினைக்கிறீர்களா எனக் கேட்டபோது, “ஐக்கிய முற்போக்குக் கூட்டணியா? அப்படியேதும் இல்லை. நாட்டில் தற்போது உள்ள நிலையைப் பார்க்கும்போது பாசிசத்திற்கு எதிராக வலுவான ஒரு மாற்றுக் கூட்டணியை உருவாக்க வேண்டும். யாரும் அதைத் தனியாகச் செய்ய முடியாது. வலிமையானவர்களுடன் சேர்ந்து அதனை ஒன்றிணைக்க வேண்டும்” என்று மம்தா பேசியிருப்பது அகில இந்திய அளவில் அவரை உற்றுநோக்க வைத்துள்ளது. இதன் மூலம் அவர் தேசிய அளவில் தனக்கான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஆனாலும், அது எந்த அளவிற்குச் சாத்தியம் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. எது எப்படி இருந்தாலும் ஆண்கள் மட்டுமே பழக்கப்பட்ட அரசியல் களத்தில் ஒரு பெண் தேசிய அளவில் தன் கனவுகளை வியாபித்துப் பார்ப்பது பாராட்டுக்குரியது.