15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், இந்த கோடைவெயிலிலும் ரசிகர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்திவருகிறது. விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத இந்தத் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸை அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர்கொள்ள இருக்கிறது. தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவியிருக்கும் மும்பை அணி, இந்த ஆட்டத்தில் முதல் வெற்றியைப் பெறும் நோக்கில் இருக்கிறது. அத்துடன் இனிவரும் எல்லாப் போட்டிகளிலும் ஜெயித்தால்தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். அதனால் இப்போட்டி மும்பைக்கு முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் லக்னோ அணி, மும்பை அணியைவிட பலமிக்கதாக இருக்கிறது. 5 ஆட்டங்களில், 3 வெற்றிகளைப் பெற்றிருக்கும் அவ்வணி புள்ளிப் பட்டியலிலும் சிறந்து விளங்குகிறது. அதனால், அவ்வணியும் மும்பையைக் கவிழ்க்கும் வகையிலேயே ஆடும். அடுத்து 7.30 மணிக்கு தொடங்க இருக்கும் போட்டியில் டெல்லியும் பெங்களூரும் மோத இருக்கின்றன. இரண்டு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால், இப்போட்டி விறுவிறுப்பு நிறைந்ததாய் இருக்கும். டெல்லி இதுவரை 2ல் வெற்றியும், பெங்களூரு 3லும் வெற்றிபெற்றுள்ளன. ஆகையால், இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியும் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து படைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.