திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆந்திரா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி டெம்போக்களில் கடத்தப்பட உள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்ததகவலின் பேரில் திருப்பத்தூர் டி.எஸ்.பி. கணேஷ் மேற்பார்வையில் ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் காவலர்கள் அச்சமங்கலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த டெம்போவை காவலர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சுமார் 2.5 டன் எடையுள்ள ரேஷன் அரிசி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனையடுத்து கடத்தல் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா 407 டெம்போவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தல் டெம்போவை ஓட்டி வந்த ஆதியூர் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் அருண்குமார் (27) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் பகுதியில் இருந்து ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தியதாக ஒப்புக்கொண்டார். எனவே, அருண்குமாரை கைது செய்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களிடம் வாகன தணிக்கையில் இருந்த காவலர்கள் ஒப்படைத்தனர்.