மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக ராஜீவ் காந்தி திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ”ஒழிப்போம், ஒழிப்போம் தீவிரவாதத்தை ஒழிப்போம், மதிப்போம், மதிப்போம் சட்டத்தை மதிப்போம்” என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை கூறி கோஷங்களை எழுப்பினர். அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், காந்தி சிலை அருகே காங்கிரஸ் நகர தலைவர் கோபால் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் கலந்து கொண்டு ராஜீவ்காந்தி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இதனைத்தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், சேலம் மாவட்டத்தின், முள்ளுவாடிகேட் பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவ சிலைக்கு, காங்கிரஸ் ஆர்.டி.ஐ., தலைமை ஒருங்கிணைப்பாளர் விஜய லட்சுமணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, “கொடுஞ்செயல் நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் சதீஷ்குமார், கலைப்பிரிவு மாநில துணைத் தலைவர் யுவராஜ், கிழக்கு மாவட்ட மணி வீரமுத்து, மாவட்ட பொதுச்செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் ஆர்டிஐ பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.