15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 58ஆவது லீக் ஆட்டத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரிஷாப் பாண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோத உள்ளது. இன்று மாலை 7.30 மணிக்கு நவி மும்பை டாக்டர் டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இந்தபோட்டி நடைபெற இருக்கிறது. இதுவரை இந்ததொடரில் 11 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியையும் தழுவி உள்ளது. அதேசமயம், டெல்லி அணி விளையாடிய 11 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியையும் தழுவி உள்ளது. இந்தநிலையில், இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் நேருக்கு நேர் 25 ஆட்டங்களில் சந்தித்துள்ளன. அதில், 13 ஆட்டங்களில் ராஜஸ்தான் அணியும் 12 ஆட்டங்களில் டெல்லி அணியும் வெற்றிப்பெற்றுள்ளன. இதனைத்தொடர்ந்து முந்தைய போட்டிகளின் நிலவரப்படி டெல்லியை விட ராஜஸ்தான் ஒரு ஆட்டத்தில் கூடுதலாக வெற்றிப்பெற்று இருந்தாலும், புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியை புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ள டெல்லி அணி வெல்லுமா என்று பார்க்க ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இந்தத்தொடரின் ஆட்ட தரவுகளோ ராஜஸ்தான் அணி தான் இந்தபோட்டியில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. எனினும் ப்ளே-ஆப் சுற்றுக்கு செல்ல ராஜஸ்தான் அணி போட்டியாளர்கள் முனைப்புடன் விளையாடி வந்தாலும் இந்தபோட்டியுடன் மேலும் ஒரு போட்டியில் வெற்றிப்பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். விறுவிறுப்பான இந்த சூழலில் இன்று வெல்லப்போவது டெல்லி அணியா! / ராஜஸ்தான் அணியா? என்று பார்ப்போம்.