சென்னையில் உள்ள காசிமேடு பகுதியை சார்ந்த 18 வயது பெண் தனது தந்தையின்றி தாயால் வளர்க்கப்பட்டு வந்தாள். இவள் தன் தாய் மறுமணம் செய்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல் யாரிடமும் அதுபற்றி பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாள். இதனிடையே ஒருவன் அவளை காதலித்து வந்தான். ஆனால், அந்த ஆணுக்கோ அவளின் பாசத்தின் ஏக்கம் கண்ணுக்கு தெரியவில்லை. அவளிடம் தன் காமப் பசியை போக்கிக்கொண்டான். இதைப் போலவே அந்த பெண்ணை அந்த பகுதியில் இருக்கும் சில ஆண்கள் அவள் வாழ்வை சீரழித்து வந்தார்கள்
எங்கள் தொண்டு நிறுவனம் சமூக சேவை செய்ய சென்றபோது அவளின் தாய் என்னிடம் வந்து அழுது புலம்பி தன் மகளை காப்பாற்றுங்கள் என்றார்.நான் அந்த பெண்ணிடம் பேசியபோது அவள் அன்புக்காக மட்டுமே ஏங்குகிறாள் என்று தெரிந்துக்கொண்டேன்.
பின்பு அந்த பெண்ணை “பெண்கள் காப்பகத்தில்” சேர்த்து படிக்கவைத்தோம். ஆனால் காப்பகத்தில் இருந்து படிக்க அவளுக்கு விருப்பமில்லை. அதனால் மீண்டும் தன் வீட்டிற்கே சென்றுவிட்டாள்.
ஒருநாள் அவளின் தாயை பார்த்து அந்த பெண் எப்படி இருக்கிறாள் என்று கேட்டேன். அவள் வீட்டில் தான் இருக்கிறாள் என்று அவளது தாயார் கண்ணீர்மல்க கூறினார்.
பின்பு அவளை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல முடிவு செய்து. அரசு மருத்துவமனையில் உள்ள மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறசெய்தோம். ஆலோசகர் அவளிடம் உரையாடினார்.அவள் மருத்துவரிடம் தன்னை பலர் பலாத்காரம் செய்தார்கள் என்று கூறி கதறி அழுதாள். அவள் விரும்பியது உண்மையான அன்பும், காதலும் கொண்டவருடன் திருமணம் செய்யவேண்டும் என்பதுதான்.
மூன்று முறை ஆலோசனை மையத்தில் அவளை கூட்டிச்சென்று ஆலோசகரிடம் ஆலோசனைப் பெறசெய்தோம். அதன் பிறகு ஒரு தெளிவான முடிவிற்கு வந்தாள். அது திருமணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் தாண்டி சாதிப்பதற்கு பல விசயங்கள் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள்.
தன் தாயை ஏற்றுக்கொண்டு ஒரு வேலைக்குச் செல்ல முடிவு செய்து, துணிக்கடையில் வேலையும் செய்து வந்தாள்.
இரண்டு வருடம் கழித்து அவளது தாய் அந்த பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்தார். தற்போது நல்ல குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறாள். இந்தப் பெண்ணைப் போன்ற மன நிலையில் உள்ளவர்கள் தகுந்த மனநல ஆலோசனைப் பெற்றால் மீண்டும் ஒரு புதிய வாழ்க்கை வாழ முடியும். வாழ்க்கை வாழ்வதற்கே…
அன்புடன்,
ச. மிரியம்
பெண்களின் குரல் ஒருங்கிணைப்பாளர்