முதுமையைக் கொண்டாடுவோம் – ரமாதேவி இரத்தினசாமி
1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் ஐ.நா. பொதுச்சபையில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம்
இயற்றப் பட்டது. ஆம். உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச முதியோர் தினம் கடைப் பிடிக் கப்பட
வேண்டும் என பிரகடனப்படுத் தப்பட்டது. 1991 முதல் ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் அனைத்திலும் ஒவ்வொரு
வருடமும் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப் படுகிறது. வயதானவர் களின் உடல் நலத்தின் மீதான
அக்கறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்கள் சமூகத்தில் சந்திக்கும் சவால்கள் குறித்த
புரிதல்களை மேம் படுத்தவுமே அவர்களுக்கான இந்நாள் ஒதுக்கப்படுகிறது. அமெரிக்காவும், கனடாவும் ஒரு
படி மேலே போய் அன்றைய தினத்தை விடுமுறையாக அறிவித்துள்ளன.
முதுமை எப்போது துவங்குகிறது? “யாண்டு பலவாக நரையில வாகுதல்” என்று புறநானூற்றில்
பிசிராந்தையாரும், “பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணாடி, ஆங்கதில் கண்டனன் அவனிக் காவலன்” என்று
தசரதனின் நரை குறித்து கம்பரும், “நரைகூடிக் கிழப் பருவமெய்தி” என்று பாரதியும் நரையையே முதுமையின்
அடையாள மாகக் கூறுகின்றனர். ஆனால் இன்றைய நவீன உலகில் பதின்ம வயதினரே இள நரையுடன்
சால்ட் & பெப்பர் முடியழகுடன் வலம் வருவதால் நரையை முதுமையின் அடையாளமாகக் கூற முடியாது.
ஒரு காலத்தில் மிகக் குறைவாக இருந்த மனிதனின் வாழ்நாள் சராசரி இன்று மருத்துவ அறிவியலின்
வளர்ச்சியினாலும், மனிதனின் அளப்பரிய கண்டுபிடிப்புகளாலும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஸ்விஸ் சில் 32.6
என்று தொடங்கும் வாழ்நாள் சராசரி அதிகபட்சமாக ஜப்பானில் 81 ஆக முடிவடைகிறது. இந்தியாவின் ஆயுள்
சராசரி 67 என்பது மிகப் பெரிய வளர்ச்சி என்பதை மறுக்க முடியாது. “ நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி
இல்லாமல் வாழ்க” என்றெல்லாம் நாம் வாழ்த்தினாலும் கூட உலக அளவில் மிகக் குறைவான நபர்களே 100
வயதைக் கடந்தும் வாழ்கின்றனர். பதியப்பட்ட வரலாற்றில் 123 என்பதே இதுவரை மனித இனத்தின் அதிக
பண்டைய இலக்கியங்களில் மூதாளர், மூத்தோர், முதுமக்கள், மூதாட்டி என்றெல்லாம் மரியாதையுடன்
அழைக்கப்பட்ட முதியோர்கள் இன்று கிழம், கிழடு, பெரிசு, கிழவி என்றாகி விட்டனர். குழந்தைமை, இளமை,
முதுமை என்ற முப்பெரும் பருவங்களுள் ஒன்றான முதுமைப் பருவம் பெரும்பாலும் யாராலும் விரும்பப்
படுவதில்லை. அனைவராலும் கொஞ்சப்படும் குழந்தைமையைக் கடந்து, துடிப்புமிக்க இளமைப் பருவத்தை
அனுபவித்து முதுமைப் பருவத்துள் நுழையும்போது பெரும்பான்மையோருக்கு ஓர் ஆயாசமும், பயமும்
ஏற்பட்டு விடுகிறது. நீண்ட ஆயுள், நிறை செல்வம், மெய்ஞ்ஞானம் பெற்று வாழையடி வாழையாக வாழும்
பெரு வாழ்வு தான் அனைவரின் பிரார்த்தனையும் பேராவலுமாய் இருந்தாலும் கூட முதுமை வந்தவுடன், தான்
அனைவருக்கும் சுமையாக இருப்பதாகக் குற்ற உணர்வில் தவிக்கிறார்கள். பல இடங்களில் அப்படி ஒரு
உணர்வு அவர்கள் மீது வலிய திணிக்கப்படுகிறது. வீடே சொர்க்கம், பிள்ளைகளே உலகம் என
இருந்தவர்களைத் தனிமையில் தவிக்க விடும்போது பரிதவித்துப் போகிறார்கள். வீட்டிற்குள்ளேயே தனித்த
அகதியாய் உணர்கிறார்கள். சுயபச்சாதாபத்தால் நிலைகுலைந்து போகின்றனர். இன்னும் சில இடங்களில்
கணவன், மனைவி ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்க வேண்டிய பருவத்தில் அம்மா உனக்கு , அப்பா
எனக்கு என பிள்ளைகளால் பங்கு போடப் படும் போது செய்வதறியாது திகைத்துப் போகின்றனர்.
இயற்கையும் தன் பங்கிற்கு, எதிர்ப்பு சக்தி குறைவு, முதுகுத் தண்டு அணுக்கள் குறைவு, அதன் தொடர்ச்சியாக
உணர்வு சக்தி குறைவு,மூட்டு நோய், நீரிழிவு என தாக்க நீண்ட ஆயுளை வேண்டி விரும்பியவர்கள் தங்கள்
முடிவை எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்து விடுகிறார்கள். தனிமைத் தீயில் வெந்து, சூனிய வெளியை
வெறித்து எஞ்சிய காலத்தைப் போக்குகிறார்கள். முதியோர் குறித்த புரிதலே தீர்வேயன்றி முதியோர்
மையங்கள் இவர்களுக்கான தீர்வாக ஒருபோதும் இருக்க முடியாது.
“மூத்தோர் சொல்லும் முது நெல்லிக் காயும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்”என்பதை நாம் காலம்
கடந்தே புரிந்து கொள்கிறோம். ஏனெனில் மூத்தோர் சொல் வார்த்தை நமக்கு அமிர்தமாய் இருப்பதில்லை.
“சும்மா தொணதொணப்பு” என்று கடந்து போகிறோம். நெடிய வாழ்வியல் அனுபவங்களைப் பெற்ற நம்
முதுமைப் பொக்கிஷங்கள் உணர்வுகளற்று இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
முதுமை என்பது அனைவருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை. இன்றைய அகால மரணங்களையும், புதுப் புது
நோய்களையும் வெற்றி கண்டு முதுமைப் பருவத்தை வெற்றிகரமாக வந்தடைகிறோம். நாம் இதுவரை கடந்து
வந்த பருவங்களைப்போல இதுவும் ஒரு மகிழ்வான பருவமே. உடற்பயிற்சி, நடைப் பயிற்சி, எளிய உணவுகள்
என வாழ்வை மாற்றிக் கொள்ளலாம். கற்றதையும், பெற்றதையும் அடுத்த தலைமுறையினருக்கு பாடமாகக்
கடத்தலாம். சாதிக்கத் துடிப்பவர்களுக்கு கடந்து வந்த பாதையை அறிமுகம் செய்யலாம். கால ஓட்டத்தில் தவற
விட்ட இளமைக்கால ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். கவிதை, கதை, ஓவியம் என கலக்கலாம். புதிய,
புதிய நூல்களையும், இனிய இசையையும் நண்பர்களாக்கிக் கொள்ளலாம். இணையம் குறித்து தெரிந்து
கொள்வது அவசியம். கற் பதற்கு வயதில்லை என்பதற்கு எண்பது வயதில் கணினி கற்ற கலைஞரை உதாரண
மாய் எடுத்துக் கொள்ளுங் கள். 55 வயதில் தன் சிறு வயது ஆசையான பரதம் கற்றுக் கொண்ட பெண் மணியை
நான் அறிவேன். பொருளாதார ரீதியாக பலப்படுத்திக் கொள்வது கட்டாயம். யாரையும் சார்ந்து இருக்க
வேண்டாம். அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுவோம். இன்பம், துன்பம், சோகம் , மகிழ்ச்சி அனைத்தையும்
ரசிக்கப் பழகுங்கள். உலகை நம் வசப்படுத்தி விடலாம்.
இளமை நிரந்தரமல்ல என்பதை அறிந்தும் கூட முதுமையை நெருங்க நெருங்க பயம் அதிகரிக்கிறது. ஆனால்
வயதாக வயதாக முகத்தில் தெளிவும், அழகும் கூடுவது உண்மை. 20 – 30 வயதில் கர்வத்தால நிரம்பியிருக்கும்
முகம், 30 – 50 வயதில் கலக்கம், கவலை சூழ காட்சியளிக்கும். ஆனால் 60 – 80 வயதில் சுய மதிப்பீடு அதிகரித்து,
முகம் பெருமிதத்தால் அழகுறுகிறது. காந்திஜியின் முகப் பொலிவிலும் , அன்னை தெரஸாவின் முகச்
சுருக்கங்களிலும் அமைதியும், கருணையும அழகாய் மிளிர்வதை மறுக்க முடியுமா? முதுமையில் துக்கமோ,
கவலையோ பெரிதாய் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எதிர்காலம் பற்றிய அச்சமில்லை. குழந்தைகள் பற்றிய
குழப்பமில்லை. மன இறுக்கம், மன உளைச்சல் இல்லை. நாளைய பொழுது நம்மிடம் இல்லை என்ற மனப்
பக்குவத்தில் நிகழ்கால வாழ்வை ரசித்து வாழலாம். சிறிய செயல்கள் செய்தாலே பெரிதாய் சாதித்ததைப் போல
மகிழ்ந்து களிக்கலாம். பெரியோர்களின் முதுமை வரமாவதற்கோ, சாபமாவதற்கோ அவர்கள் மட்டும் காரணம்
இல்லை. சுற்றியிருக்கும் உறவுகளும், நட்புகளும், சமூகமுமே காரணம். அவர்கள் பணத்துக்காக ஏங்கவில்லை.
கொஞ்சம் அன்பும், கூடுதலாய் கரிசனமும், செவிக்கினிய நான்கு வார்த்தைகளும், கொஞ்சமே கொஞ்சம்
உடல்சார் உதவிகளும் தான். நாம் அவர்களுக்காக ஒதுக்கும் சிறு பொழுதும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
நம்மைச் சுற்றியிருக்கும் ‘வாழ்ந்து நிறைந்தவர் களை;மகிழ்வித்து முதுமையைக் கொண்டாடி வரவேற்போம்.