அனைத்து வயதுப் பெண்களையும் முதுகுவலி முடக்கிப்போடுகிறது. முதுகுவலியின் தன்மையையும் இதற்குத் தீர்வுகாணும் முறைகளையும் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் நமது முதுகின் அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்வோம். ஒரு மனிதனின் பின்புறக் கழுத்தில் இருந்து இடுப்பு பகுதி வரையிலான இடத்தை நாம் முதுகு என்று கூறுவோம். இப்பகுதி 31 முதுகெலும்புகளால் (Vertebrate ) ஆனது. இந்த முதுகெலும்புகள் பார்ப்பதற்கு செங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கியதைப் போல் இருக்கும். இந்தப்பகுதி யானது பலமான தசைகளால் (Paraspinal Muscules) சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு முதுகெலும்பிற்கும் இடையே டிஸ்க் எனப்படும் வட்டவடிவ பஞ்சுபோன்ற அமைப்புள்ளது. இந்தப் பஞ்சுபோன்ற அமைப்பானது உடலில் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கிக்கொள்ளப் பயன்படுகிறது.
முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 கோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலில் பல முக்கிய உறுப்புகளுக்குச் சென்று செயல்பட்டு வருகின்றது .
இந்த முதுகுத்தண்டுவட மானது (spine) நான்கு வளைவுகளைக் கொண்டது. இந்த முதுகுத் தண்டுவடத்தை மேல்முதுகு (Cervical, thoracic ) மற்றும் கீழ்முதுகு (Lumbar ) என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் கீழ் முதுகு பகுதியானது அதிகம் அசையக்கூடியதாகவும் (Highly Mobile ) மற்றும் நமது உடல் எடையைத் தாங்கக்கூடியதாகவும் உள்ளது. இந்தக் கீழ்முதுகு பகுதியில் இயற்கையாகவே ஒரு வளைவு அமைந்து உள்ளது. எந்தப் பொறியாளராலும் கூட இப்படி ஒரு அற்புதமான அமைப்பைக் கட்ட இயலாது. இறைவனே மிகப்பெரிய பொறியாளன்.
இந்த அமைப்புகளின் காரணத்தால் கீழ்முதுகுப் பகுதியில் அதிகம் வலி ஏற்படுவது இயல்பு . இந்த முதுகு வலி ஆண்களை விடப் பெண்களுக்கு அதிக பாதிப்பைக் கொடுக்கக்கூடியது .
முதுகுவலிக்கான காரணங்கள் :
முதுகுவலி ஏற்படப் பெரும்பாலும் நமது தோரணை (Posture) தான் முதற்காரணம். அலுவலகத்திலோ, நமது வீட்டிலோ நாம் அமரும் தோரணைமுறை சரியாக இல்லை என்றால் அதன்மூலம் முதுகுவலி ஏற்படலாம், இதைத்தவிர பெரும்பாலான நபர்களுக்கு முதுகுவலி வருவதற்கு அவர்கள் கடைபிடிக்கும் வாழ்க்கைமுறை பழக்கங்கள் (Life Style Habits)பெரும் பங்கு வகிக்கின்றது . அதிலும் பெண்கள் குதிகால் உயர்ந்த (High Heal ) காலணிகளை அணிவதால், அவர்கள் கீழ்முதுகுப் பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமாகி கீழ்முதுகுப் பகுதியில் உள்ள வளைவை அதிகமாக மாற்றுகிறது (lumbar lordosis).
கணினியில் அமர்ந்து வேலை செய்பவர்கள் தங்கள் வசதிக்கேற்ப அமர்வதாலும். அவர்கள் நாற்காலி மற்றும் கணினியின் தட்டச்சு விசைப்பலகை (keyboard) உயரம் சரியாக இல்லாததாலும் நாளடைவில் முதுகுவலி ஏற்படலாம் இயந்திரமாக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் நாம் செய்யவேண்டிய அன்றாட வேலைகளை எளிமையாக்க நாம் உபயோகிக்கும் கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெஷின் போன்றவை நம் வேலை பளுவையும் நேரத்தையும் குறைப்பதாலும் நம் உடல் தசைகளின் சக்தியையும் வெகுவாகக் குறைத்துவிடுகிறது . இந்த சக்தியை இழந்த தசைகள் நாளடைவில் டி-கண்டிஷனிங் அதாவது செயலற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது இது முதுகுப்பகுதியைச் சுற்றி உள்ள தசைகளுக்கு நன்றாகப் பொருந்தும்.
பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் வளர்ந்துவரும் குழந்தையின் எடை அதிகரிப்பும் முதுகுவலி வர காரணமாக அமையும்.
இதுதவிர, அதிகநேரம் மற்றும் அதிக ஏற்ற இறக்கங்கள் உள்ள சாலையில் இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டிச் செல்லும் போதும் வலி ஏற்படலாம்.
வலி நிறைந்த வாழ்க்கையில் வலித்தீர வழி இல்லாமல் இல்லை .
முதுகுவலி ஏற்பட்ட காலத்திலேயே அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால், வலியை ஆரம்ப காலத்திலேயே சரி செய்துவிடலாம். இயன்முறை மருத்துவ சிகிச்சையில் {Physiotheropy} இதற்கான பயிற்சிகளும் வலி நிவாரண முறைகளும் நிறைய இருக்கின்றன.
-சங்கீதா
(பிசியோதெரபிஸ்ட்)