கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வெந்தபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு 2018ஆம் ஆண்டு திருமணமாகி பிரியதர்ஷினி என்ற மனைவியும் கதிர்ச்செல்வன், மித்திரன் என்ற 2 மகன்களும் உள்ளனர். டிரைவராக வேலை பார்த்து வந்த மணிகண்டன் பலமுறை மது அருந்திவிட்டு வண்டி, நகை, பணம் உள்ளிட்ட பொருட்களைக் கேட்டு பிரியதர்ஷினியை தகாத வார்த்தையால் திட்டியும் அடித்தும் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மணிகண்டன், 2ஆவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால், மனமுடைந்த பிரியதர்ஷினி கணவர் 2ஆவது திருமணம் செய்துக்கொண்டதை எதிர்த்தும், வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும் கடந்த ஆண்டு மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்தநிலையில், மணிகண்டன் 2ஆவதாக திருமண செய்துக்கொண்டதாக சொல்லப்படும் பெண் மூலம் குழந்தை பிறந்து இருப்பதை அறிந்த பிரியதர்ஷினி தன்னையும் தனது குழந்தைகளையும் அனாதையாக விட்டுவிட்டு 2ஆவது திருமணம் செய்து கொண்ட கணவர் மணிகண்டனை கைது செய்தும், திருமணத்திற்கு துணைநின்ற மாமனார், மாமியார் மற்றும் கொழுந்தனார் ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மனு ஒன்றை குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, மனுவின் மீது எந்த நடவடிக்கை எடுக்காததால் பிரியதர்ஷினி தனது 2 மகன்களுடன் சாலையில் நீதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து பிரியதர்ஷினியை அங்கு இருந்து அனுப்பி வைத்தார். அதனையடுத்து பிரியதர்ஷினியின் கணவர், மாமனார், மாமியார், கொழுந்தனார் மற்றும் பிரியதர்ஷினியின் கணவரின் 2ஆவது மனைவி ஆகிய 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.