நான்தான் முதல் பெண்மணி.நானே இறுதி அல்ல.
உலகின் முதல் நிலை நாடு என்று கருதப்படும் அமெரிக்காவின் துணை அதிபராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றபின் தன் ஆதரவாளர்களிடையே பேசி கமலா ஹாரிஸ் கூறிய சொற்கள் இவை.
அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர். முதல் கருப்பினத் துணை அதிபர். இப்படிப் பல முதல்களைத் தன்னகத்தைக் கொண்ட தனித்துவ ஆளுமைதான் கமலா தேவி ஹாரிஸ்.
தமிழகத்திலிருந்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவுக்குச் சென்ற கமலாவின் தாயார் ஷியாமளா கருப்பினத்தைச் சேர்ந்த டோனால்ட் ஹாரிசை மணந்தார்.
கருப்பின மக்கள் அதிகம் நிறைந்த பகுதியில் வசித்த கமலாவும் அவருடைய தங்கை மாயாவும் அருகே பள்ளிக்குச் சென்றார்கள். அங்கு கருப்பினத்தவர் என்பதால் அவமானப்படுத்தப்பட்டார்கள். அந்தக் காயம் கமலாவின் மனதில் ஆறாத வடுவாக மாறியது.
கமலாவுக்கு ஏழு வயது இருக்கும்போது அவருடைய பெற்றோர் விவாகரத்து பெற்றார்கள். பணிக்காக கனடாவின் மாண்ட்ரியல் நகருக்குக் கமலாவின் தாய் குடிபெயர்ந்தார். அங்கு ஒரு பிரெஞ்சு கற்பிக்கும் பள்ளியில்தான் கமலா படித்தார். அங்கு அவருடைய நெருங்கிய தோழிக்குச் சிக்கல் வந்தது. அந்தத் தோழிக்கு அவளுடைய தாயின் இரண்டாவது கணவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். தன் தாயின் அனுமதியுடன் தன் வீட்டிலேயே அந்தத் தோழியைப் பள்ளி இறுதியாண்டு வரை கமலா வைத்துக்கொண்டார். இந்த அனுபவம்தான் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து ஒரு வழக்கறிஞராக கமலா முனைப்பு காட்டுவதற்கு உந்துதலாக இருந்தது.
பள்ளிப் படிப்பு முடிந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார் கமலா ஹாரிஸ். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டமும் முடித்து 1990இல் வழக்கறிஞராகப் பணி தொடங்கினார் அவர். சான் பிரான்சிஸ்கோ மாவட்டத்தின் வழக்கறிஞராக அவர் பணிபுரிந்தபோது, கொலைக்குற்றங்களுக்கு அதிக அளவுக்குத் தண்டனை பெற்றுத் தந்தார். வன்முறை அல்லாத குற்றங்களுக்கு எதிராகவும் கமலா ஹாரிஸ் கடுமையாகப் போராடி தண்டனைகளைப் பெற்றுத் தந்தார். 2000 ஆண்டுகளில் சான் பிரான்சிஸ்கோவின் கொலைக் குற்ற விகிதம் தேசிய கொலைக் குற்ற விகிதத்தைவிட அதிகமாக இருந்தது. கமலாவின் வழக்குரைஞர் திறமை காரணமாக தண்டனை அதிகரித்து கொலைக் குற்றங்களும் குறையத் தொடங்கின. பாலியல் குற்றங்களுக்கு உச்சபட்ச தண்டனைகளைப் பெற்றுத் தந்து குற்றவாளிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார் கமலா ஹாரிஸ்.
2010இல் கலிபோர்னியா தலைமை வழக்கறிஞர் பதவிக்குப் போட்டியிட்டு கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். 2014ஆம் ஆண்டிலும் அவர் மீண்டும் போட்டியிட்டு வென்றார். சொத்துரிமை, பண மோசடி, தனிமனித உரிமை போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த கமலா மனித உரிமை மீறலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்தார்.
சமூக வலைதளங்களில் பெண்களின் படங்களைத் திருடி அவதூறு பரப்பும் நபர்களுக்குக் கடுமையான தண்டனை வாங்கித் தந்ததன் மூலம் கமலா ஹாரிஸ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தார்.
2016 பொதுத் தேர்தலில் கலிபோர்னியாவிலிருந்து செனட் சபைக்கு கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுமக்களின் பேராதரவு அவருக்குக் கிடைத்தது.
2017இல் பல முஸ்லிம் நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவுக்கு வருவதற்குத் தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆணை பிறப்பித்தபோது, அதற்கு கமலா ஹாரிஸ் எதிர்ப்புத் தெரிவித்தார்.
2020 தொடக்கத்தில் அமெரிக்க அதிபரைத் தகுதி இழக்க வைக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கமலா ஹாரிஸ் எழுச்சி உரையாற்றினார். இது அமெரிக்காவின் கவனத்தைப் பெற்றுத் தந்தது.
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் அறிவிக்கப்பட்டவுடன், அவருடன் துணை அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தகுதியானவராக கமலா ஹாரிஸ் பெயர் உடனே இடம் பெற்றது.
கமலா தன்னை இந்தியர் என்று வெளிப்படையாக எப்போதும் அறிவித்துக்கொண்டதில்லை. தன்னைக் கருப்பர் என்று கூறிக்கொள்வதையே கமலா ஹாரிஸ் விரும்புகிறார். அதுதான் ஜோ பைடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உதவிகரமாக இருந்தது.
பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பிம்பமாகவே கமலா ஹாரிஸ் தன்னை வெளிக்காட்டியிருக்கிறார். பெண்களுக்கு அமெரிக்க அதிகார கட்டமைப்பில் பெரிதாக இடம் இருக்கவில்லை. பல முக்கியப் பொறுப்புகளை பெண்கள் அங்கு வகித்திருக்கிறார்கள். அமைச்சர் அளவில் பெண்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் துணை அதிபராக ஆக முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஹிலாரி கிளிண்டன் அதற்கான முயற்சிகளைச் செய்தார். ஆனால் அதில் அவர் வெற்றிபெறவில்லை.
கமலா ஹாரிசின் மிகவும் அசத்தலான ஆளுமையே அவரை உயர் பதவியில் அமர வைத்திருக்கிறது. அவருடைய பேச்சில் எப்போதும் தெளிவு இருந்திருக்கிறது. அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட வடு அவர் மனதில் இருந்தாலும் அதற்கான துயரத்தை அவர் எப்போதும் வெளிப்படுத்தியதில்லை. ஒரு ஆளுமை துணிந்து நின்றால் வெற்றி பெற முடியும் என்றே அவர் நிரூபித்து வந்திருக்கிறார்.
அவருடைய பேச்சில் தனித்தன்மையைப் பார்க்க முடிவதாக அமெரிக்கப் பத்திரிகைகள் அவரைப் பாராட்டித் தீர்த்தன. யாரையும் எளிதில் கவரக்கூடிய ஒரு ஆளுமையாக அவர் இருக்கிறார் என்று அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் மூக்கின் மீது விரல் வைத்தார்கள்.
சாதாரண மக்களும் உயர் பதவியை அடைய முடியும் என்பதற்கான ஒரு அடையாளமாக கமலா ஹாரிஸ் விளங்குகிறார்.
அவருடைய தாயார் பல ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்கா சென்று அங்கு இரண்டறக் கலந்துவிட்டார். அமெரிக்கப் பண்பாட்டின் ஒரு பகுதியாக மாறிவிட்ட கமலா கிருத்துவராகவே வாழ்கிறார்.
ஆனால் கமலா ஒரு இந்தியர், ஒரு தமிழர் என்ற பெருமைகள் வானைப் பிளந்தன. அவர் நம் ஊர் பிராமணர் என்று ஒரு கூட்டம் கொண்டாடித் தீர்த்தது. மன்னார்குடியை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அதிகாரத்தின் உச்சத்தைத் தொட்டுவிட்டார் என்று அந்த மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் உற்சாகம் அடைந்தார்கள்.
ஒரு பெண்ணாக பெரிய அளவுக்கான சாதனை புரிந்த கமலா, நான்கு ஆண்டுகள் கழித்து அதிபர் தேர்தலுக்குக்கூட போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்காவில் இப்போதே பேச்சு எழுந்துவிட்டது.
வாழ்க கமலா ஹாரிஸ்.